காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு விருந்து அளிக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையைக் காட்டும் விதமாக இந்த விருந்து நடத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்றிணைந்து செயல்பட்டன. பெகாசஸ், வேளாண் சட்டம், விலைவாசி உயர்வு ஆகியவை குறித்து ஆளும் அரசு விவாதத்திற்கு வர வேண்டும் என கூட்டத்தொடர் முழுவதும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வந்தன.
அத்துடன், நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து 15க்கும் மேற்பட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் தொடர்ச்சியாக ஆலோசனை செய்தனர். கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்ற வாயிலில் ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் அரசுக்கு எதிராக இன்று (ஆக.12) பேரணி மேற்கொண்டனர்.
எதிர்க்கட்சியினரின் இந்த ஒற்றுமையை உறுதிபடுத்தும் விதமாகவே சோனியா காந்தி விருந்துக்கு ஏற்பாடு செய்யவுள்ளதாக காங்கிரஸ் தரப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதில் மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி ஆகியோரும் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ’60% மக்களின் குரல் ஒடுக்கப்படுகிறது’ - எதிர்க்கட்சிகள் பேரணியில் ராகுல் குற்றச்சாட்டு