கோவா: ஹரியானாவின் பாஜக மகளிரணி நிர்வாகியும், சமூக வலைதள பிரபலமான சோனாலி போகட் கடந்த ஆக. 23ஆம் தேதி, கோவாவில் உயிரிழந்தார். முதலில், அவர் மாரடைப்பு காரணமாக இறந்ததாக காவல் துறையினர் தெரிவித்த நிலையில், இதை அவர்களின் குடும்பத்தினர் ஆரம்பத்தில் இருந்து ஏற்க மறுத்து வருகின்றனர். தற்போது, அவரின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்துள்ள நிலையில், இவ்வழக்கில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டுள்ளது.
அவரின் உடற்கூராய்வு அறிக்கையின் நகலை, ஈடிவி பாரத் ஊடகம் ஆய்வு செய்தது. அதில், அவர் உடலில் இருந்து சேகரிக்கப்பட்ட திசுக்கள் சார்ந்த சில பரிசோதனைகளின் முடிவுகள் இன்னும் வரவில்லை என்பது தெரியவந்தது."அவரின் உடல் முழவதும் பல்வேறு வெளிப்படையான வெட்டு காயங்கள் இருக்கிறது.
மேற்கூறியவற்றை கருத்தில் கொண்டு, மரணம் எவ்வாறு நிகழ்ந்தது என்பதை விசாரணை அதிகாரிதான் உறுதிப்படுத்த வேண்டும்" என கோவா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, அந்த உடற்கூராய்வு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
சோனாலி போகட்டின் உடற்கூராய்வு அறிக்கை வெளிவந்ததை தொடர்ந்து, கோவா காவல் துறையினர் நேற்று (ஆக. 25) கொலை வழக்காக பதிவு செய்தனர். அதன்பேரில், அவரின் உதவியாளர், உதவியாளரின் நண்பரை ஆகிய இருவரை சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர். முன்னதாக, தனது சகோதரி சோனாலி போகட்டின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக கூறி அவரின் சகோதரர் ரிங்கு, கோவா காவல் துறையிடம் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில்,"கோவா வருவதற்கு அவருக்கு எந்த திட்டமும் இல்லை. திட்டமிடப்பட்ட சதி காரணமாக அவர் அழைத்து வரப்பட்டார். இங்கு தற்போது படப்பிடிப்பு இல்லை. தங்கும் விடுதியில் இரண்டு அறைகள் வெறும் இரண்டு நாள்களுக்கு மட்டும் எடுக்கப்பட்டுள்ளது. ஆக.24ஆம் தேதிதான் அவருக்கு படப்பிடிப்பு இருந்துள்ளது. ஆனால், ஆக. 21, 22 ஆகிய இரண்டு நாள்களுக்கு மட்டுமே அறை எடுக்கப்பட்டுள்ளது" என குறிப்பிட்டுள்ளார்.
தனது சகோதரி சோனாலி, அவரின் உதவியாளர்களான சுதிர் சங்வான், அவனின் நண்பன் சுக்விந்தர் ஆகியோர் சோனாலியின் உணவில் போதை மருந்துகளை கலந்து, அவரை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்திருக்கலாம் என்றும் அதில் குற்றஞ்சாட்டியுள்ளார். மேலும், சோனாலி, ஆக.23ஆம் தேதி அன்று தான் இறப்பதற்கு சில மணிநேரத்திற்கு முன், அவரின் குடும்பத்தாருடன் இயல்பாக செல்ஃபோனில் பேசியுள்ளார் என்றும் ரிங்கு தனது புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து, அவரின் மற்றொரு உறவினரான மொனிந்தர் சோனாலி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு, படுகொலை செய்யப்பட்டுள்ளதாக செய்தியாளர்களிடம் கூறினார். தொடர்ந்து சோனாலி போகட்டின் 15 வயது மகளான யஷோதரா, தனது தாயின் மரணத்திற்கு நீதி வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
கடந்த சட்டப்பேரவை தேர்தலில், ஹரியானா மாநிலத்தின் ஆதம்பூர் தொகுதியில் சோனாலி போகட் பாஜக சார்பாக போட்டியிட்டார். அதில் வெற்றி பெறாத அவர், 2020ஆம் ஆண்டு தனியார் தொலைக்காட்சி நடத்திய 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காதலர்களை கட்டிவைத்து அடித்த கிராமத்தினர்... திருமணமான பெண் தற்கொலை...