ஜார்க்கண்ட்: தான்பத் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஓம் குமார் தூரி. இவரது தாயாரான பைஜ்நாத் தூரி காலமாகிவிட்டார். ஆனால் தனக்கு இறுதிச்சடங்கு செய்யும் முன் மகன் திருமணம் செய்து கொண்டிருக்க வேண்டும் என்பது அந்த தாயின் கடைசி ஆசை.
தாயின் ஆசையை நிறைவேற்றியே தீருவது என துணிந்த ஓம்குமார் தூரி, வீட்டில் தாயின் சடலத்தை வைத்து விட்டு கோயிலுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார். பின்னர் மனைவியுடன் வீட்டுக்கு வந்து தாயின் பாதத்தை வணங்கிய பின்னரே இறுதிச்சடங்குகள் தொடங்கின.
இது குறித்து ஓம்குமார் தூரி கூறும் போது, நீண்ட நாட்களாகவே உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த தனது தாய், வீட்டுக்கு மருமகள் வந்த பின்னரே தனது இறுதிச்சடங்கு நடைபெற வேண்டும் என விரும்பியதாகவும் கூறுகிறார்.
ஓம்குமாருக்கும் சரோஜ் என்ற பெண்ணுக்கும் வரும் 10ம் தேதி திருமணம் நடைபெறுவதாக ஏற்கெனவே ஆடம்பர ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ஆனால் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்ட ஓம்குமாரின் தாய் திடீரென கடந்த வியாழனன்று காலமானார்.
![வீட்டில் சடலமாக தாய் - கோயிலில் திருமணம் செய்த மகன்...!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/jh-dha-03-anokha-vis-jh10002_08072022192602_0807f_1657288562_230.jpg)
எனினும் தாயின் ஆசையை நிறைவேற்ற முடிவு செய்த ஓம்குமார், அருகிலுள்ள சிவன் கோயிலில் எளிமையான முறையில் உடனடியாக திருமணம் செய்து கொண்டார். இதன் பின்னரே மணமக்கள் வீட்டுக்கு வந்த பின்னர் இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. தாய் மகனின் இந்த பாசமிக்க நிகழ்வு அந்த கிராமத்தில் பேசு பொருளானது.