திருவனந்தபுரம்: கேரளாவின் மாஹேவை சேர்ந்தவர் நாஜி நவுஷி. இவருக்கு 12ஆம் வகுப்பு முடித்தவுடன் திருமணம் செய்துவைக்கப்பட்டது. 19 வயதிலே தாயானார். இவருக்கு 5 குழந்தைகள் உள்ளன. இவரது கடைசி குழந்தைக்கு 2 வயதே ஆகிறது. இந்த நிலையிலும் கத்தாரில் நடைபெற உள்ள உலகக்கோப்பை கால்பந்து போட்டியைக் காண்பதற்காக தனது காரிலேயே அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். சொல்லப்போனால், நாஜி ஒரு யூடியூபர், டிராவலர், விலாகர் (Vlogger) என்று பன்முகம் கொண்டவர். குறிப்பாக மிகப்பெரும் கால்பந்து ரசிகரும் கூட. அதிலும் அர்ஜெண்டினா கால்பந்தாட்ட அணியும், லியோனல் மெஸ்ஸியும் நவுஷியின் ஃபேவரைட் பட்டியலில் வைத்துள்ளார்.
இதுகுறித்து நவுஷி கூறுகையில், “பிபா உலகக்கோப்பைக்கு கேரளாவை சேர்ந்த பெண் ஒருவர் கார் பயணமாக செல்வது இதுவே முதல்முறையாகும். டிசம்பர் 10ஆம் தேதி அன்று கத்தாரில் நுழைவதுதான் எனது திட்டம். அதன்பின் டிசம்பர் 31 வரை கத்தாரில் தங்குவேன்.
அனைத்து அத்தியாவசியப் பொருட்களும், சமையலுக்குத் தேவையான பொருட்களையும் வாகனத்தில் வைத்துள்ளேன். சுங்கச்சாவடிகள் மற்றும் பெட்ரோல் நிலையங்களில் இரவில் தங்க திட்டமிட்டுள்ளேன். என்னிடம் ஓமன் நாட்டு ஓட்டுநர் உரிமம் உள்ளது. என்னுடைய கடைசி குழந்தையை நான் திரும்பி வரும் வரை, எனது தாய் கவனித்துக் கொள்வார்.
இந்த கார் பயணம் மட்டுமின்றி, சமூக வலைதள பணிகளுக்கும் ஒவ்வொரு முறையும் என்னுடைய கணவர் என்னை ஊக்குவித்துக் கொண்டே இருக்கிறார். கேரளாவில் உள்ள எந்தவொரு பெண்ணும் தனது கனவுகளை நனவாக்க முடியும்” என்றார். இவரது பயணத்தை கேரளாவின் போக்குவரத்து துறை அமைச்சர் ஆண்டனி ராஜூ கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பயணம் நேற்று தொடங்கியது. கேரளாவில் இருந்து காருடன் நாஜி கப்பல் மூலம் ஓமனுக்கு செல்கிறார். அங்கிருந்து சாலை வழியாக ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன், குவைத் மற்றும் சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகளை கடந்து கத்தாரை அடைய உள்ளார்.
இதையும் படிங்க: ஒரே பல்கலைகழகத்தில் பியூனிலிருந்து பேராசிரியர்; பிகாரியின் சாதனை பயணம்