கர்நாடகா: கர்நாடகாவில் மே 10ஆம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதில் பாஜக மற்றும் காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது. தேர்தல் பிரசாரம் தீவிரமடைந்துள்ள நிலையில், அக்கட்சிகளின் முக்கியத் தலைவர்கள் பரப்புரையில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று(ஏப்.30) கோலார் வயல் எனப்படும் கே.ஜி.எஃப்பில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றார். அப்போது பேசிய அவர், "தேர்தல் பிரசாரத்தின்போது காங்கிரஸ் தலைவர்கள் என்னை பாம்புடன் ஒப்பிட்டுப் பேசியிருக்கிறார்கள். ஆனால், சிவன் கழுத்தை அலங்கரிக்கும் வசீகரம் கொண்டது பாம்பு. என்னைப் பொறுத்தவரை நாட்டு மக்கள்தான் சிவன், நான் அவர்கள் கழுத்தை அலங்கரிக்கும் பாம்பாக இருப்பதை நல்லதாகவே உணர்கிறேன். காங்கிரஸின் அத்துமீறல்களுக்கு கர்நாடக மக்கள் இந்த தேர்தலில் தக்க பதிலடி கொடுப்பார்கள். காங்கிரஸ் மீதான மக்களின் கோபம் மே 10ஆம் தேதி எதிரொலிக்கும்.
காங்கிரஸ் மீது நாட்டு மக்கள் நம்பிக்கை இழந்ததற்கு முக்கியமான காரணம், ஊழல். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது, 85 சதவீத கமிஷன் என்பதுதான் அக்கட்சியின் அடையாளமாக இருந்தது. அதாவது, ஒரு திட்டத்தில் ஒரு ரூபாய் அறிவிக்கப்பட்டால், அதில் 15 பைசா மட்டுமே மக்களுக்குச் சென்றடையும், மீதமுள்ள 85 பைசாவை காங்கிரஸ் கட்சியினர் கொள்ளையடித்துவிடுவார்கள்.
ஆனால், இன்று பாஜக அரசு ஒரு திட்டத்திற்கு நிதியை அறிவித்தால், அதில் நூறு சதவீதம் மக்களுக்கு சென்றடைகிறது. கடந்த ஒன்பது ஆண்டுகளில், டிஜிட்டல் இந்தியாவில் பல்வேறு திட்டங்களின் கீழ், ஏழை எளிய மக்களின் வங்கிக் கணக்கில், 29 லட்சம் கோடி ரூபாய் செலுத்தப்பட்டுள்ளது. 85 சதவீதம் கமிஷன் வாங்கி ஊழல் செய்யும் காங்கிரஸ் இருந்திருந்தால், இதில் 24 லட்சம் கோடியை கொள்ளையடித்திருப்பார்கள்.
ஊழலில் திளைத்த காங்கிரஸ் கட்சியால் ஒருபோதும் ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது. அதேபோல், ஊழல் இல்லாத எந்த திட்டத்தையும் காங்கிரஸால் கொண்டுவர முடியாது. இன்றும் காங்கிரஸின் முக்கியத் தலைவர்களும், அவர்களுக்கு நெருக்கமானவர்களும் ஊழல் வழக்கில் சிக்கி தற்போது ஜாமீனில் வெளியே இருக்கிறார்கள். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு ஜாமீனில் வெளியே இருப்பவர்கள் இன்று கர்நாடகாவிற்கு வந்து பிரசாரம் செய்கிறார்கள். அவர்களால் ஒருபோதும் ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க முடியாது" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: சூடானில் இருந்து வந்த 117 இந்தியர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர் - கரோனாவுக்கு இல்லை?
இதையும் படிங்க: Karnataka Election: காங்கிரஸூக்கு ஊழல் மட்டுமே சொந்தம் - பிரதமர் மோடி விமர்சனம்