பெகுசராய்: பிகார் மாநிலம், பெகுசராய் மாவட்டத்தின் குஸ்மாத் என்ற கிராமத்தைச் சேர்ந்த 6 வயது சிறுவன், நேற்று(ஜூலை 14) மாலை விளையாடச்சென்றான்.
சிறுவன் நீண்ட நேரமாக வீட்டுக்குத் திரும்பாததால், பெற்றோர் சிறுவனைத் தேட ஆரம்பித்துள்ளனர். பல மணி நேரமாக தேடிய நிலையில், கிராமத்தில் இருந்த ஒரு குழியில் சிறுவன் சடலமாக கிடந்துள்ளான். இதைக்கண்ட பெற்றோர் கதறி அழுதனர். தகவலறிந்து சம்பவ இடத்துக்குச்சென்ற போலீசார், சிறுவனின் சடலத்தை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
சிறுவனின் கண்களில் கத்தியால் குத்தப்பட்டு, நாக்கு அறுபட்ட நிலையில், கொடூரமாக கொலை செய்யப்பட்டு, பின்னர் குழியில் தூக்கி வீசியுள்ளதாக போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து, கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்தனர்.
இதுகுறித்து பேசிய சிறுவனின் தந்தை தாமோதர், "எங்களுக்கு யாருடனும் பகை இல்லை. எங்கள் குழந்தை யாரை என்ன செய்தான்? அவனை ஏன் இவ்வளவு கொடூரமான முறையில் கொலை செய்தார்கள்?" என்று ஆதங்கத்துடனும் கண்ணீருடனும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: தூம் பட பாணியில் கொள்ளை: கர்நாடக மாநில கொள்ளையன் கைது