கோவிட்-19 இரண்டாம் அலை காரணமாக இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் கடும் பாதிப்பைச் சந்தித்துவருகிறது. பல மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவிவருகிறது. இது மகாராஷ்டிர மாநிலத்தில் தீவிர பாதிப்பை ஏற்படுத்திவருகிறது.
அங்கு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் நிலை மிகவும் மோசமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. அவர்களுக்குத் தேவையான மருத்துவ உபகரணங்களுக்கும் தற்போது தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. ஆக்சிஜன் தட்டுப்பாட்டால் மருத்துவமனையில் பலர் இறந்துவருகின்றனர்.
அந்தவகையில், மகாராஷ்டிர மாநிலம் தானே வர்தக் நகரில் உள்ள வேந்தா மருத்துவமனையில், ஆக்சிஜன் பற்றாக்குறையால் ஆறு நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த நோயாளிகளின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு மருத்துவர்கள், மருத்துவமனை நிர்வாகத்தினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து அங்கு காவல் துறையினர் வரவழைக்கப்பட்டுள்ளனர்.