பீகார்(சிவான்): பீகார் மாநிலம் சிவான் பகுதியைச் சேர்ந்தவர் பிரதீப் குமார் யாதவ். இவர் அக்னிவீர் திட்டத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்டு ராணுவத்தில் கடந்த ஒரு வருடங்களாகப் பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில் நேற்று(டிச.12) வழக்கம்போல் ஜம்மு காஷ்மீர் மாநிலம் அக்னூரில் உள்ள தாண்டா பகுதியில் பிரதீப் பணி நிமித்தமாக காவலில் இருந்துள்ளார்.
அப்போது பிரதீப் இருந்த இடத்தில் இருந்து துப்பாக்கி வெடிக்கும் சத்தம் மட்டும் கேட்டுள்ளது. இதையடுத்து பிரதீப் காவலில் இருந்த இடத்திற்கு வந்த சக இராணுவ வீரர்கள், மர்மமான முறையில் பிரதீப் சுடப்பட்டு உயிரிழந்ததைக் கண்டி அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து அங்கிருந்த ராணுவ வீரர்கள் உடனடியாக அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்த நிலையில், பிரதீப்பின் உடல் கைப்பற்றப்பட்டு ராணுவ மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டது. அப்போது பிரதீப் உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிபடுத்தினர். இதைத் தொடர்ந்து, பிரதீப்பின் பெற்றோருக்கு இது குறித்து நேற்று இரவௌ தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவத்தன்று காலையில் தான் பிரதீப் அவரது குடும்பத்தினரிடம் பேசியுள்ளார். இது குறித்து பிரதீப்பின் சகோதரர் கூறுகையில், காலையில் தான் என் தம்பியுடன் பேசினோம். இரவில் என் தம்பி இறந்ததாக செய்தி எங்கள் குடும்பத்தில் உள்ள அனைவரையும் உலுக்கியது. இந்த பணியில் சேர்ந்ததில் என் தம்பி மட்டுமில்லாமல் எங்கள் குடும்பத்தில் இருந்த அனைவரும் மகிழ்ச்சியில் இருந்தோம். ஆனால் தற்போது பிரதீப் உயிரிழந்ததாக ராணுவ அதிகாரி தெரிவித்தது எங்களால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை" என்று தெரிவித்தார்.
ராணுவ பணியில் சேர்ந்த பிறகு முதல் முறையாக அவர் அவரது சொந்த ஊருக்கு திரும்பிய போது, பிரதீப்புக்கு ஊர்மக்கள் அனைவரும் கூடி மேலத்தாளங்களுடன் மாலை அணிவித்து மரியாதை செலுத்திய நிகழ்வை நினைவுகூர்ந்து கிராமமக்கள் பிரதீப்பின் இறப்பிற்கு வேதனை தெரிவித்து வருகின்றனர். தொடர்ந்து, மர்மமான முறையில் உயிரிழந்த ராணுவ வீரரான பிரதீப்பை சுட்டது யார், எங்கிருந்து சுடப்பட்டது, எதற்காக சுடப்பட்டது போன்ற பல்வேறு கோணங்களில் ராணுவ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ராஜஸ்தான் முதலமைச்சர் பதவியேற்பு விழா தேதி அறிவிப்பு!