டெல்லி: பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சுசில் ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபா கைது.
உடல்நலக் குறைவு காரணமாக டேராடூன் தனியார் மருத்துவமனையில் சிவசங்கர் பாபா சிகிச்சை பெற்று வந்ததாகக் கூறப்பட்ட நிலையில், இன்று அவர் மருத்துவமனையில் இருந்து தப்பியோடியதாக தகவல் வெளியானது. டேராடூன் சென்ற சிபிசிஐடி தனிப்படை போலீசார், அவரை டெல்லி காசியாபாத் பகுதியில் வைத்து கைது செய்தனர்.
சமூக வலைதளங்களில் புகார்:
சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் உள்ள சுசில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு அப்பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா பாலியல் தொல்லை கொடுத்ததாக சமூக வலைதளங்களில் புகார் எழுந்தது.
இதையடுத்து, மாமல்லபுரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் மீது மூன்று புகார்கள் அளிக்கப்பட்டு போக்சோ சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின்கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதன் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி கடந்த 13ஆம் தேதி காவல் துறைத் தலைவர் திரிபாதி உத்தரவிட்டார்.
சிபிசிஐடி விசாரணை
அதன்படி போக்சோ வழக்கு உள்ளிட்ட மூன்று தனித்தனி வழக்குகளை மூன்று தனிப்படைகள் அமைத்து சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
சிபிசிஐடி தனிப்படையொன்று டேராடூனுக்கு நேற்று விரைந்தது. மற்ற இரு குழுக்கள் சுசில் ஹரி பள்ளிக்கு நேரடியாகச் சென்றும், புகார் அளித்த மாணவிகளிடம் ரகசிய வாக்குமூலம் பெற்றும், சிவசங்கர் பாபாவிற்கு எதிரான முக்கிய ஆதாரங்களைத் திரட்டும் பணியிலும் ஈடுபட்டுவருகின்றனர்.
சிவசங்கர் பாபா வெளிநாடுகளுக்குத் தப்பிச் சென்றுவிடாமல் இருக்க நேற்று அவருக்கு லுக்அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது.