புதுச்சேரியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாநில உரிமை மீட்க புதுச்சேரி மக்கள் நலன் காக்க என்ற தலைப்பில் சிறப்பு மாநாடு நடைபெற்றது. கம்பன் கலையரங்கில் நடைபெற்ற இந்த மாநாட்டில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் சீத்தாராம் யெச்சூரி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார்.
மாநாட்டில் அரசியல் தலைமை குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட நிர்வாகிகளும் கலந்து கொண்டனர். மாநாட்டில் புதுச்சேரிக்கு முழு மாநில அந்தஸ்து வழங்கிட வேண்டும், மின்வாரிய தனியார் மையமாக்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் போன்ற தீர்மானங்கள் பிரகடனப்படுத்தப்பட்டன.
தொடர்ந்து பேசிய சீத்தாராம் யெச்சூரி, பாஜக ஆளும் மற்றும் ஆதரவு தெரிவிக்கும் மாநிலங்கள் இரட்டை எஞ்சின் போன்று செயல்பட்டு வருகிறது. இதனால் மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியாமல் தோல்வி அடைந்துள்ளது. உதாரணமாக இந்தியாவில் மிகவும் பின்தங்கிய மாநிலமாக உத்தரபிரதேசம் உள்ளது.
பாஜக அல்லாத மாநிலங்களில் நியமிக்கப்படும் ஆளுநர்களின் செயல்பாடு பல சர்ச்சைகளை ஏற்படுத்தி வருகிறது. பாஜக இல்லாத மாநிலங்களில் ஆளுநரை வைத்து ஆட்சியை கவிழ்ப்பதற்கு மட்டுமே அவர்களை பயன்படுத்துகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசை சீர்குலைக்க வேண்டும் என்பதே மத்திய அரசின் நோக்கமாக உள்ளது. அதுபோல்தான் புதுச்சேரி ஆளுநர் செயல்பாடு கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிராக உள்ளது. ஒருபோதும் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றார்.
மத்தியில் ஆளும் மோடி அரசு ஜனநாயகத்திற்கு எதிரான கோட்பாட்டினை உருவாக்கி வருகிறது. ஆனால் மக்கள் அதை நிராகரிக்கிறார்கள். இருந்தாலும் பாஜக பண பலத்தால் ஆட்சியைப் பிடிக்க திட்டமிடுகிறது என்று குற்றம் சாட்டினார். ஜனநாயக எதிர்ப்பு அரசியலை பாஜக அனைத்து துறைகளிலும் திணிக்க நினைக்கிறது. அது போல தான் புதிய கல்விக் கொள்கை எந்த மாநில அரசிடம் விவாதிக்கப்படாமல் திணிக்கப்படுகிறது. இதனால் தான் பல பிரச்சனைகள் எழுகிறது என்றார்.
மாநில மொழிகளுக்கு தேசிய கல்விக் கொள்கையில் முக்கியத்துவம் இல்லை. ஆர்எஸ்எஸ் சிந்தனையால் வரும் தலைமுறைகளை உருவாக்குவதே புதிய கல்வியின் நோக்கம். மதசார்பின்மை, சமூகநீதி, பொருளாதார சுதந்திரம், கூட்டாட்சி தத்துவம் இவைகளுக்கு எதிராக மோடி அரசு செயல்பட்டு அரசியலமைப்பு சட்டத்தையே அழிக்க நினைக்கிறது என்று குற்றம் சாட்டிய அவர் இந்து ராஷ்ட்ரிய கொள்கைகளுக்கு எதிராக சிபிஎம் தனது போராட்டத்தை நடத்தும் என்றார். இதற்காக மதசார்பின்மை கொள்கை உடைய அனைத்து இயக்கங்களும் ஓர் அணியில் திரள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
மேலும் மோடி ஒவ்வொரு நாளும் எந்த கோயிலுக்கு செல்ல வேண்டும் என்று ஆர்எஸ்எஸ் தான் திட்டம் வகுத்துக் கொடுக்கிறது. பாஜகவின் தவறான கொள்கையால் மக்கள் வேதனை அனுபவித்து வருகிறார்கள். கார்ப்பரேட் கம்பெனிகள் சொத்துக்களை குவித்து வருகின்றன. விலை உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், வறுமை போன்றவை நாட்டில் தலை ஓங்கி நிற்பதாகவும், பல போராட்டங்கள் நடத்தியும் ஒரு பலனும் இல்லை என்றார். உபா சட்டம் ஜனநாயகத்திற்கு எதிரானது, அந்த சட்ட நமக்கு தேவைதானா என்று கேள்வி எழுப்பினார்.
பாஜகவுக்கு எதிராக வலுவான போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது என்றும் சிபிஎம் தொடர்ந்து மக்களின் நலனுக்காக போராடும் என்றும் அவர் குறிப்பிட்டார். நாட்டில் இந்து ராஷ்ட்ரிய கொள்கைகளை அமல்படுத்த பாஜக முயற்சி செய்து வருகிறது. அதனை பிரதமர் மோடியே முன் நின்று செய்வதாக சீத்தாராம் யெச்சூரி பகிரங்கமாக குற்றம் சாட்டினார்.
இதையும் படிங்க: எனது சந்திப்பால் முதலமைச்சருக்கு சிக்கல் வருமோ என்ற அச்சம் உள்ளது - நளினி