டெல்லி: பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா(Akanksha Dubey) படப்பிடிப்புக்காக உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசிக்குச் சென்றிருந்தார். அங்குள்ள ஹோட்டலில் தங்கியிருந்த நிலையில், கடந்த 26ம் தேதி, அகன்ஷா இருந்த அறை நீண்ட நேரமாகியும் திறக்கப்படவில்லை. சந்தேகம் அடைந்த அவரது உதவியாளர் ஹோட்டல் நிர்வாகத்துக்குத் தகவல் அளித்தார். இதையடுத்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது, அகன்ஷா தூக்கில் சடலமாக கிடந்தார். எனினும் தற்கொலை கடிதம் ஏதும் சிக்கவில்லை என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதற்கிடையே அகன்ஷாவின் தாய் மது துபே போலீசில் புகார் ஒன்றை அளித்தார். பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் ஆகியோர், தனது மகளை மிரட்டியதாகவும், தற்கொலைக்குத் தூண்டியதாகவும் கூறினார். மகளின் மரணத்துக்கு அவர்கள் இருவருமே காரணம் என்றும் குற்றம்சாட்டினார். அதன் அடிப்படையில் போலீசார் விசாரணையைத் தீவிரப்படுத்தினர்.
மேலும், பாடகர் சமர் சிங் மற்றும் அவரது சகோதரர் சஞ்சய் சிங் ஆகியோர் வெளிநாடுகளுக்கு தப்பிச் செல்லாத வகையில் காவல்துறை தரப்பில் ரெட் கார்னர் நோட்டீஸ் வெளியிடப்பட்டது. இந்நிலையில் உத்தரபிரதேச மாநிலம் காஜியாபாத்தில் சமர்சிங் தலைமறைவாகி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் சமர்சிங்கை கைது செய்தனர்.
இதுகுறித்து நொய்டா காவல் துணை ஆணையர் நிபுன் அகர்வால் கூறுகையில், "போஜ்புரி நடிகை அகன்ஷா தற்கொலை வழக்கில், வாரணாசி போலீசார் எங்களின் உதவியை நாடினர். இதைத் தொடர்ந்து பாடகர் சமர்சிங் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் கடந்த 4 நாட்களாக காஜியாபாத்தில் தங்கியிருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது" என்றார்.
இந்த வழக்கில் தலைமறைவாகி இருக்கும் சஞ்சய் சிங்கை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: கேரள ரயில் தீ வைப்பு வழக்கு - டெல்லி இளைஞருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவல்!