புதுச்சேரி: தொழில் மற்றும் தொழிலாளர் துறை செயலர் வல்லவன் இன்று வெளியிட்ட வீடியோ பதிவில், "புதுச்சேரியில் தொழிற்சாலை துறை, சுற்றுச்சூழல் துறை ஆகியவற்றில் கடந்த காலங்களில் தொழில் முனைவோருக்கு உரிமம் வழங்குவதில் கால தாமதம் ஏற்படுள்ளதாக புகார்கள் வந்தன. அதனைத் தவிர்க்கும் பொருட்டு தொழில் தொடங்க ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கும், புதுப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நேரடியாக அலுவலகம் வர தேவையில்லை.
இனி ஒரு முறை உரிமம் எடுத்து அவற்றை புதுப்பித்தாலே தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு உரிமம் செல்லுபடியாகும். தொழிற்சாலைகளில் தொழில் துறை அலுவலர்கள் அடிக்கடி ஆய்வு செய்வது இடையூறாக உள்ளதாக பலர் புகாரளித்து வந்தனர். இந்த புகாரையடுத்து, தொழிற்சாலைகள் மீது யாரேனும் புகார் அளித்தால் அதன் அடிப்படையில் மட்டுமே ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலுக்கு எந்தவிதமான பாதிப்பு ஏற்படாத தொழிற்சாலைகளை ஆய்வு மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மேலும் வாரத்தில் ஏழு நாட்களும் ஒவ்வொரு துறை அலுவலர்கள் ஆய்வு செய்வது தவிர்க்கப்பட்டு, மின்துறை தொழிலாளர் துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து ஒரு நாளில் ஆய்வு செய்யும் சூழ்நிலையை உருவாக்கி உள்ளோம். இதற்காக சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டு வருகிறது. இம்மாத இறுதிக்குள் அவை செயல்படுத்தப்படும். திருத்தங்கள் செய்த பிறகு புதுச்சேரியில் தொழில் தொடங்குவது எளிமையாக்கபடும்" என்று தெரிவித்துள்ளார்.