அமிர்தசரஸ்: பஞ்சாப் பாப் பாடகர் சித்து மூஸ்வாலா காரில் சென்றுகொண்டிருந்த போது, 2022 மே29ஆம் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பை பஞ்சாப் அரசு குறைத்த 24 மணி நேரத்திற்குள் இந்த அசம்பாவித சம்பவம் நிகழ்ந்தது. 28 வயதான சித்து மூஸ்வாலாவின் இயற்பெயர் சுப்தீப் சிங் சித்து ஆகும்.
இவர், 1993ஆம் ஆண்டு மூஸ்வாலா என்ற கிராமத்தில் பிறந்தார். பின்னாள்களில் தனது கிராமத்தின் பெயரை தன்பெயருடன் இணைத்துக் கொண்டார். பாப் பாடகரான இவரது பாடல்கள் சர்ச்சைக்கு பெயர்போனவை. ஒருமுறை இவரது ஜட்டி ஜியோனே மோர் வார்கி என்ற பாடல் 18ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சீக்கிய போர் வீரர் மாய் போக்கோ மீது அவதூறு பரப்புவதாக இருப்பதாக விமர்சனங்கள் எழுந்தன.
கடந்தாண்டு காங்கிரஸில் இணைந்த சித்து மூஸ்வாலா, ஆம் ஆத்மி கட்சிக்கு எதிராக பல கூட்டங்களில் கலந்துகொண்டார். அண்மையில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் மான்சா போட்டியிட்ட மூஸ்வாலா, ஆம் ஆத்மி வேட்பாளரிடம் 63 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவினார்.
இந்தத் தேர்தலில் பெரும் வெற்றியை ஈட்டிய ஆம் ஆத்மி அரசு ஆட்சியமைத்தது. தொடர்ந்து மூஸ்வாலா உள்ளிட்ட 420 பேருக்கு அளிக்கப்பட்ட பாதுகாப்பு பாதியாக குறைக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த மாதம் (மே) 29ஆம் தேதி, மூஸ்வாலா துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார். அதாவது போலீஸ் பாதுகாப்பு குறைக்கப்பட்ட 24 மணி நேரத்தில் இந்தக் கோரச் சம்பவம் நிகழ்ந்தது.
இந்த துப்பாக்கிச் சூட்டுக்கு பின்னால் லாரன்ஸ் பிஷ்னு என்பவர் ஈடுபட்டிருக்கலாம் எனவும், இதற்கு பிரபல கனடா வாழ் தாதா கோல்டி பிரார் உதவியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கொல்லப்பட்ட பாடகர் சித்து மூஸ்வாலா குடும்பத்தினர் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்களின் மகன் சாவுக்கு நீதி கோரியுள்ளனர். இந்தச் சந்திப்பு இன்று (ஜூன்4) நடைபெற்றது.
இதையும் படிங்க: Exclusive: பஞ்சாப் பாடகர் சித்து மூஸ்வாலா சுட்டுக்கொலை; பின்னணி என்ன?