ஹூப்ளி: கர்நாடக முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையா இன்று(ஆகஸ்ட் 3) தனது 75வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவர் முதல்வராக இருந்தபோதே அவரது 75வது பிறந்தநாளை விமரிசையாக கொண்டாட வேண்டும் என முடிவு செய்யப்பட்டது. அதன்படி இன்று நள்ளிரவு முதலே சித்தராமையாவின் ஆதரவாளர்கள் அவரது பிறந்தநாளை கொண்டாட தொடங்கினர். ஹூப்ளியில் உள்ள நட்சத்திர விடுதியில் நள்ளிரவில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இதில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
இதைத்தொடர்ந்து இன்று தாவணகெரேயில் பிரம்மாண்ட விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பங்கேற்பதற்காக காங்கிரஸ் எம்.பி ராகுல்காந்தி கர்நாடகா சென்றுள்ளார். நேற்றிரவு ஹூப்ளி சென்ற அவருக்கு காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சித்தராமையா பிறந்தநாள் விழாவைத் தொடர்ந்து, பல்வேறு நிகழ்ச்சிகளில் ராகுல்காந்தி பங்கேற்கவுள்ளார்.
கர்நாடகாவில் அடுத்த ஆண்டு சட்டப்பரேவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் யார் முதல்வர்? என்பது தொடர்பாக சித்தராமையாவுக்கும், டி.கே.சிவக்குமாருக்கும் இடையே பனிப்போர் நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் ராகுல்காந்தியின் வருகை முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கதுறை சோதனை