பெங்களூரு: நடைபெற்று முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில், காங்கிரஸ் 135 இடங்களைக் கைப்பற்றி தனிப் பெரும்பான்மை உடன் ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே, அடுத்த முதலமைச்சரை தேர்வு செய்யும் பணி கடந்த 4 நாட்களாக இழுபறியாக நீடித்த நிலையில், நேற்று (மே 19) காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா முதலமைச்சராகவும், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் துணை முதலமைச்சராகவும் பதவி ஏற்க உள்ளதாக காங்கிரஸ் தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
இதற்காக இருவரும், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமையகம் மற்றும் இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவின் இல்லத்தில் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், சோனியா காந்தி, ராகுல் காந்தி, கே.சி.வேணுகோபால் உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்களும் இடம் பெற்றிருந்தனர்.
இதனையடுத்து, நாளை (மே 20) பெங்களூருவில் உள்ள ஸ்ரீ கண்டீரவா ஸ்டேடியத்தில் வைத்து பதவிப்பிரமாண நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்பட பல்வேறு எதிர்க்கட்சிப் பிரமுகர்களுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.
இந்த நிலையில், புதிதாக அமைய உள்ள கர்நாடக அமைச்சரவையில் இடம் பெற இருக்கும் சட்டமன்ற உறுப்பினர்களின் பட்டியல் தயார் செய்யப்பட்டு வந்தது. இதன்படி 12 முதல் 15 அமைச்சர்கள் நாளை நடைபெற இருக்கும் நிகழ்வில் அமைச்சர்களாக உறுதிமொழி ஏற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தப் பட்டியலானது, சாதி, மதம், முன்னுரிமை மற்றும் பெண் பிரதிநிதித்துவம் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, அமைச்சர் பதவிக்காக பல்வேறு மூத்த சட்டமன்ற உறுப்பினர்கள், சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமாரின் இல்லங்களில் முகாமிட்டிருந்தனர்.
அது மட்டுமல்லாமல், சமூக சுவாமிக்கள் மற்றும் மேலிடத்தின் பரிந்துரையிலும் சிலரின் பெயர்கள், அமைச்சரவை பரிந்துரைப் பட்டியலில் இடம் பெற்றுள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தப் பட்டியலில் மூத்த நிர்வாகிகள் மட்டுமல்லாது சில புது முகங்களும் இடம் பெற்றுள்ளதாகவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, முன்னாள் துணை முதலமைச்சர் டாக்டர் பரமேஷ்வர், முன்னாள் அமைச்சர்கள் கே.ஜே.ஜார்ஜ், ராமலிங்க ரெட்டி, எம்பி படில், ஆர்.வி.தேஷ்பாண்டே, ஹெச்.கே.படில், எம்.கிருஷ்ணப்பா, பிரியங்க் கார்கே, லக்ஷ்மன் சாவடி, ஜெகதீஷ் ஷெட்டர், தினேஷ் குண்டுராவ், கிருஷ்ணபைரே கவுடா, ஹெச்.சி.மஹாதேவப்பா, யு.டி.காதர், ஐஷ்வர் காந்தரே, ஜமீர் அகமது கான் மற்றும் லஷ்மி கெபால்கர் ஆகிய மூத்த நிர்வாகிகள் பட்டியலில் உள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.
அதேநேரம், சரண்பிரகாஷ் படில், ஷிவலிங்கே கவுடா, சிவராஜ் தங்கடாகி, புட்டாரங்கா ஷெட்டி, அல்லம்பிரபு படில், ஷரன்பாசப்பா தர்ஷன்புரா, தன்வீர் சேத், சலீம் அகமது, நாகராஜ் யாதவ், ரூபா சசீதர், எஸ்.ஆர்.ஸ்ரீனிவாஸ், சேலுவரயசுவாமி, எம்.பி.நரேந்திர சுவாமி, மகடி பாலகிருஷ்ணா, ராகவேந்திரா ஹிட்னால், பி.நாகேந்திரா, கே.ஹெச்.முனியப்பா, ஆர்.பி.திம்மபுரா, சிவானந்தா படில், எஸ்.எஸ்.மல்லிகார்ஜூன், ரஹீன் கான் மற்றும் பைரடி சுரேஷ் ஆகியோரின் பெயர்களும் பட்டியலில் உள்ளதாக உத்தேசிக்கப்படுகிறது.
இவ்வாறு, பலரின் பெயர்களோடு கூடிய அமைச்சரவை பரிந்துரை பட்டியலோடு, சித்தராமையா மற்றும் டி.கே. சிவகுமார் ஆகிய இருவரும் இன்று (மே 19) சிறப்பு விமானம் மூலம் டெல்லி சென்றுள்ளனர். டெல்லியில் உள்ள மூத்த கட்சி நிர்வாகிகள் உடன் ஆலோசனை செய்து உருவாகும் இறுதிப் பட்டியலோடு, இருவரும் இன்று மாலையே பெங்களூரு திரும்பி வர உள்ளனர்.
இதையும் படிங்க: சித்தராமையா எனும் நான்: சோசலிச ஈர்ப்பு தொடங்கி... 2வது முறை முதலமைச்சர் வரை கடந்து வந்த பாதை!