மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாகி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமானது என இந்து சேனா அமைப்பினர் கடந்த 8-ஆம் தேதி மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
வழக்கு மாவட்ட சிவில் சீனியர் டிவிசன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட மசூதி அமைந்துள்ள இடத்தை அரசு அமீனா நேரில் சென்று அளவீடு செய்து ஜனவரி 20ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதுகுறித்து இந்து சேனா அமைப்பின் வழக்கறிஞர் கூறுகையில், மதுராவில் உள்ள ஷாகி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமானது. 1669 காலக்கட்டங்களில் கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருந்த கோவிலை முகலாய பேரரசர் அவரங்கசீப் இடித்து அகற்றிவிட்டு மசூதி அமைத்துள்ளார்.
மாவட்ட நீதிமன்றம் சர்ச்சைக் குரிய இடம் தொடர்புடைய நபர்களுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. விரைவில் ஷாகி இத்கா மசூதியை அரசு அளவீடு செய்து அறிக்கை அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜனவரி 20ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டதும் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
முகலாய பேரரசர் அவுரங்கசீப் ஆட்சிக் காலத்தில் இந்து கோவிலை இடித்து விட்டு ஞானவாபி மசூதி கட்டப்பட்டதாகவும் மசூதிக்குள் வழிபாடு நடத்த அனுமதி கோரியும் தொடரப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தற்போது ஸ்ரீகிருஷ்ண ஜென்மபூமி தொடர்பான வழக்கில் மாவட்ட நீதிமன்றம் சர்ச்சைக் குரிய இடத்தை அளவீடு உத்தரவிட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சீனா உள்பட 5 நாட்டு பயணிகளுக்கு ஆர்டி-பிசிஆர் கட்டாயம் - மத்திய சுகாதாரத்துறை உத்தரவு