புதுடெல்லி: புழக்கத்தில் இருக்கும் 2000 ரூபாய் நோட்டுகள், செப்டம்பர் 30ஆம் தேதி வரை செல்லுபடியாகும் என்பதால், அதன் சட்டப்பூர்வ டெண்டர் தொடர்ந்து நீடிப்பதாக தெரிவித்து உள்ள இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ், மக்கள் தங்களிடம் உள்ள 2000 ரூபாய் நோட்டுகளை, கடைகளில் கொடுத்தால், கடை உரிமையாளர்கள், அதனை வாங்க மறுக்கக் கூடாது. மேலும் இந்த நோட்டுகளை மாற்றுவது தொடர்பான மக்களின் தேவைகளை வங்கிகள் உணர்ந்து உள்ளதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
2000 ரூபாய் திரும்பப் பெறுவது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான பிறகு, முதல்முறையாக பத்திரிகையாளர்களை சந்தித்த இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது, பண மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாகவே, ரூ.2000 நோட்டுகள் வாபஸ் பெறுவது மேற்கொள்ளப்பட்டு உள்ளது. அதற்கான ஏற்பாடுகளை விரைந்து செய்ய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறினார்.
'நோட்டுகளின் பரிமாற்றம், பணமதிப்பிழப்பு நடவடிக்கையின் போது பணமதிப்பு நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, நாணயத்தை நிரப்புவதற்காக இந்த நோட்டுகள் அப்போது அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போதைய நிலவரப்படி, பொதுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமான அளவில், பிற வகை ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் உள்ளன, மேலும் 2,000 ரூபாய் நோட்டுகளின் புழக்கம் இப்போது கணிசமாகக் குறைந்து உள்ளது, இது மொத்த நாணயத்தில் 10.8 சதவீதமாக மட்டுமே உள்ளது. எனவே, இந்த வாபஸ் பெறுதலின் மூலம் ஏற்படும் தாக்கம் நாட்டின் பொருளாதாரத்தில் மிகக் குறைவாகவே இருக்கும்' என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்.
'2000 ரூபாய் நோட்டுகளை டெபாசிட் செய்வதற்கும், அதை மாற்றுவதற்கும் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவான செப்டம்பர் 30-ம் தேதிக்குள் திரும்பப் பெறப்பட்ட ரூ.2,000 ரூபாய் நோட்டுகளில் பெரும்பாலானவை மத்திய வங்கிக்கு திரும்பும்' என்று சக்திகாந்த தாஸ் நம்பிக்கை தெரிவித்து உள்ளார். இந்திய நாட்டின் நாணய மேலாண்மை அமைப்பு மிகவும் வலுவாக உள்ளதாக, அவர் தெரிவித்து உள்ளார்.
நாட்டில் புழக்கத்தில், போதுமான அளவு நோட்டுகள் இருப்பதால், கரன்சி இருப்பு குறித்து கவலைப்படத் தேவையில்லை என்று ரிசர்வ் வங்கி கவர்னர் தெரிவித்துள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் மற்றும் மேற்கு நாடுகளில் சில வங்கிகளின் தோல்வி காரணமாக நிதிச் சந்தைகளில் நெருக்கடி ஏற்பட்ட போதிலும், இந்திய ரூபாயின் மாற்று விகிதம் நிலையானதாக இருப்பதாக அவர் குறிப்பிட்டு உள்ளார்.
பொதுமக்களின் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் ரிசர்வ் வங்கி தேவைப்படும்போதெல்லாம் விதிமுறைகளைக் கொண்டு வரும் என்பதால், நோட்டுகளை மாற்ற வங்கிகளுக்கு அவசரப்பட வேண்டிய அவசியமில்லை என்று அவர் தெரிவித்து உள்ளார்.