உலகின் வயதான துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்ற பெருமையைப் பெற்றவர் சந்திரோ தோமர். ஆண்கள் அதிகமாகப் பயிற்சிபெறும் ஜொஹ்ரி கிளப் அகாதெமியில் சந்திரோவின் பேத்தி துப்பாக்கிச் சுடுதல் பயிற்சி எடுக்க விரும்பினார். தனியாகச் செல்ல கூச்சப்பட்ட பேத்திக்கு உறுதுணையாக அவரும் சென்றிருக்கிறார். அங்கு பேத்தி துப்பாக்கிச் சுட தயங்குவதைப் பார்த்த சந்திரோ, உடனடியாக துப்பாக்கியை எடுத்து இலக்கை துல்லியமாகச் சுட்டுள்ளார். இதைக்கண்ட பயிற்சியாளர் ஃபரூக் பதான், தன்னுடைய அகாதெமியில் சேரும்படி சந்திரோவுக்கு அறிவுரை வழங்கியிருக்கிறார். அதனையேற்று அகாதெமியில் பயிற்சிபெற்ற சந்திரோவின் வாழ்க்கை பயணம் மாறிப்போனது.
எண்ணற்ற பதக்கங்களை வென்று பெண்ணினத்துக்கு பெருமை சேர்த்தார் சந்திரோ தோமர். ஒரு போட்டியில் டெல்லியின் முன்னாள் டிஐஜி தீரஜ் சிங், சந்திரோவிடம் தோற்றுப்போனார். சந்திரோவுடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள தீரஜை அழைத்ததற்கு, ஒரு பெண்ணிடம் அவமானப்பட்டுவிட்டேன், புகைப்படம் எடுக்க முடியாது என மறுத்துச் சென்றுவிட்டார். இப்படி பலரை கதிகலங்கச் செய்த சந்திரோ, கரோனா பாதிப்புக்குள்ளாகி ஏப்ரல் 26ஆம் தேதி முதல் அவதிப்பட்டு வந்தார். மீரட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று (ஏப்ரல் 30) சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது கொழுந்தியாள் பிரகாஷி தோமரும் இந்தியாவின் முதுமையான ஷூட்டிங் வீராங்கனைகளில் ஒருவர் ஆவார். அவருக்கு உத்வேகமாக இருந்தவர் சந்திரோதான்.

இவர்கள் வாழ்க்கையை மையமாகக் கொண்டு ‘சாண்ட் கி ஆங்’ என்ற படம் வெளியாகி விருதுகளை பெற்றது. சந்திரோவின் மறைவுக்கு விளையாட்டுத் துறை, திரைத்துறை என பல்வேறு துறையை சேர்ந்தவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சந்திரோ மறைவு குறித்து ‘சாண்ட் கி ஆங்’ படத்தில் அவரது கதாபாத்திரத்தில் நடித்த பூமி பெட்நேகர், சந்திரோ பாட்டி இறந்த செய்தி கேட்டு நொறுங்கிப்போனேன். என்னில் பாதியை இழந்தது போல உணர்கிறேன். தனக்கென தனி சட்டத்தை வகுத்துக்கொண்டு, பல பெண்களை தங்கள் கனவுகளை நோக்கி ஓடச்செய்தவர். அவரது குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்துள்ளார்.
இவரது மறைவுக்கு மத்திய இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை இணை அமைச்சர் கிரண் ரிஜிஜூ வருத்தம் தெரிவித்துள்ளார். அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், நமது நேசத்திற்குரிய பாட்டியின் மறைவுச் செய்தி கேட்டு மனம் கலங்குகிறது. லட்சக்கணக்கானவர்களுக்கு உத்வேகம் அளித்தவர் அவர், இனியும் உத்வேகம் அளிப்பார். அவர் ஆன்மா சாந்தியடையட்டும் என குறிப்பிட்டுள்ளார்.