பால்கர்(மகாராஷ்டிரா): டெல்லியில் காதலியை கொலை செய்து, உடலை 35 துண்டுகளாக வெட்டி வெவ்வேறு இடங்களில் வீசிய காதலனை கடந்த 12ஆம் தேதி போலீசார் கைது செய்தனர். 6 மாதங்களுக்கு முன்பு நடந்த இந்த கொலை சம்பவம் சில நாட்களுக்கு முன்பு வெளிச்சத்துக்கு வந்தது.
காதலன் அஃப்தாப் அமீனும், கொல்லப்பட்ட ஷ்ரத்தாவும் திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில் வாழ்ந்து வந்ததாகவும், திருமணம் செய்யச்சொல்லி ஷ்ரத்தா வற்புறுத்தியதால் அஃப்தாப் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்ததும் தெரியவந்தது.
இந்த நிலையில், இருவருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ஷ்ரத்தா அஃப்தாபை பிரிய நினைத்ததாக அவரது நண்பர்கள் தெரிவித்துள்ளனர்.
ஷ்ரத்தாவின் நண்பர் ராஜத் சுக்லா கூறுகையில், "ஷ்ரத்தா கொல்லப்பட்ட செய்தியை செல்போனில்தான் பார்த்தேன். அவள் கொல்லப்பட்ட செய்தியினைக் கேட்டதும் மொத்தமாக அதிர்ந்துவிட்டேன். அவள் ஒருவரை காதலிப்பதாகவும், அவருடன் ஒன்றாக வாழ்வதாகவும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு எங்களிடம் கூறினாள். ஆரம்பத்தில் மகிழ்ச்சியாகவே இருந்துள்ளனர். பிறகுதான் அஃப்தாப் அவளை அடிப்பதாக கூறினாள். அவனை பிரிய நினைத்தும் முடியவில்லை என்றும் கூறினாள். அந்த உறவிலிருந்து வெளியேறுவது அவளுக்கு மிகவும் கடினமாக இருந்தது. அவரது வாழ்க்கை நரகம்போலவே இருந்தது. இருவரும் டெல்லி சென்றதும், ஷ்ரத்தா எங்களது நட்பை முற்றிலும் துண்டித்ததுபோல இருந்தது" என்றார்.
ஷ்ரத்தாவின் மற்றொரு நண்பர் லக்ஷ்மண் நதீர் கூறும்போது, "அவர்கள் இருவருக்கும் இடையே நிறைய சண்டைகள் ஏற்பட்டன. ஷ்ரத்தா சில நேரம் காவல்துறையில் புகார் அளிக்கவும் நினைத்தாள். ஆனால், தங்களது உறவு பொதுவெளியில் தவறாக சித்தரிக்கப்படும் என்ற பயத்தில் போலீசிடம் செல்லவில்லை. ஒருநாள் அஃப்தாப் மிரட்டியதால் பயந்துபோன ஷ்ரத்தா, இரவு நேரத்தில் வெளியில் தங்க ஏற்பாடு செய்யும்படி எங்களிடம் கேட்டாள். நாங்களும் செய்து தந்தோம்" என்றார்.