தமிழ்நாடு சட்டப்பேரவைக்கு கடந்த மாதம் 6ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. இதையடுத்து, மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்ட 75 வாக்கு எண்ணும் மையங்களில் இன்று(மே.2) வாக்குகள் எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டு வருகிறது.
தற்போதைய நிலவரப்படி, திமுக கூட்டணி 148 இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக கூட்டணி 87 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளது. ஆட்சி அமைத்திட தேவையான பெரும்பான்மையை திமுக கைப்பற்றிவிட்டதால், அண்ணா அறிவாலயத்தில் தற்போதே கொண்டாட்டம் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தனது ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், "மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகள். சிறப்பான வெற்றியை பெற்றுள்ளீர்கள். உங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்த மக்களுக்காக சேவைசெய்திட வாழ்த்துகள்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
அதே போல, கேரள தேர்தலில் தொடர்ச்சியாக வெற்றியை பதித்துவரும் பினராயி விஜயனுக்கும் சரத்பவார் வாழ்த்து தெரிவித்துள்ளார்.