சந்த்கபீர்நகர்(உத்தரப்பிரதேசம்): நகைச்சுவை நடிகர் விவேக் நடித்த 'காதல் சடுகுடு' படத்தில் பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளியிடம் அபராதத்தொகை விதித்து, அவரது குற்றத்திற்கு தண்டனை வழங்குவதாக கிராமப்பஞ்சாயத்து தலைவர் தீர்ப்பளிப்பார். அதற்கு நடிகர் விவேக்கிடம் 'குற்றவாளி சென்ற பஞ்சாயத்திலேயே நான் அபராதத்தொகையை செலுத்தி விட்டதாக' கூறுவார். ‘பின்னர் விவேக் அட்வான்ஸ் புக்கிங்ல ரேப் பண்ணிட்டு இருக்கீங்க’ எனக் கேட்பார். பின்னர் அந்த தீர்ப்பை வழங்கிய அவரது தந்தை பஞ்சாயத்துத்தலைவரிடம் 'இந்த தண்டனை போதாது' எனக் கூறுவார். இப்படிப்பட்ட நிகழ்வு ஒன்று நிஜ வாழ்க்கையிலும் நடந்துள்ளது.
உத்தரப்பிரதேசத்தின் சந்த்கபீர்நகர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமப்பஞ்சாயத்தில், பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ.1.25 லட்சம் இழப்பீடு வழங்கி, வன்கொடுமை செய்தவர் பிரச்னையை முடித்துக்கொள்ளுமாறு பஞ்சாயத்துத்தலைவர்கள் தீர்ப்பு வழங்கிய இழிவான சம்பவம் ஒன்று நடந்துள்ளது.
16 வயது சிறுமி ஒருவர் கடந்த திங்கள்கிழமை(ஆகஸ்ட் 1) மாலை இயற்கை உபாதைகளுக்கு வெளியே சென்றுள்ளார். அப்போது அச்சிறுமி வசிக்கும் கிராமத்தைச்சேர்ந்த 18 வயது இளைஞர் ஒருவர் அச்சிறுமியை பாலியல் வன்கொடுமைச் செய்ததாகக் கூறப்படுகிறது.
பின்னர், நடந்த சம்பவம் குறித்து சிறுமி குடும்பத்தினரிடம் தெரிவித்தார். மறுநாள் (ஆகஸ்ட் 2) காலை, சிறுமியின் தந்தை பாதிக்கப்பட்ட பெண்ணுடன் காவல் நிலையத்திற்கு வந்து குற்றம்சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி புகார் அளித்தார். புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், கிராமத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். பின்னர் குற்றம்சாட்டப்பட்ட இளைஞரை காவல் துறையினர் கைது செய்தனர்.
இதனையடுத்து இளைஞர் கைது செய்யப்பட்ட நாள் அன்றே மாலை விடுதலை செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. அடுத்த நாள், குற்றம் சாட்டப்பட்டவர் கிராமத்தில் செல்வாக்கு மிக்க குடும்பத்தைச்சேர்ந்தவர் என்பதால், கிராமத்தின் பஞ்சாயத்துத்தலைவர்கள் இந்த விஷயத்தில் தலையிட்டனர். இதுதொடர்பாக பஞ்சாயத்து நடைபெற்றது. இதில் குற்றம் சாட்டப்பட்டவரின் குடும்பம் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு இழப்பீடாக 1.25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறுமியின் குடும்பத்தாரும் அப்பணத்தை எடுத்துக்கொண்டதாகவும் கூறப்படுகிறது.
இருப்பினும், உள்ளூர் காவல் நிலையத்தின் தலைமைக்காவலர் 'இழப்பீடு' பற்றி எந்தத்தகவலும் இல்லை என்று தெரிவித்துள்ளார். ஆனால், குற்றம்சாட்டப்பட்டவருக்கு எதிராக முறைப்படி புகார் அளிக்கப்பட்டால் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இதையும் படிங்க:கோவை மாணவி தற்கொலை வழக்கு: மேலும் இருவர் கைது...