பிராயக்ராஜ்: உத்தரப்பிரதேசத்தில் பிரபல ரவுடியும், அரசியல்வாதியுமான அடிக் அகமது மற்றும் அவரது சகோதரர் அஷ்ரஃப் இருவரும் கடந்த 15ஆம் தேதி இரவு சுட்டுக் கொல்லப்பட்டனர். மருத்துவப் பரிசோதனைக்காக பிராயக்ராஜில் உள்ள மருத்துவமனைக்கு போலீசார் அழைத்துச் சென்றபோது, போலீசார் மற்றும் பத்திரிகையாளர்கள் கண் முன்னே இந்த படுகொலை சம்பவம் நடந்தது. பத்திரிகையாளர்கள் போல வந்த மூன்று பேர் அடிக் அகமதுவையும், அவரது சகோதரரையும் சுட்டுக் கொன்றனர்.
அந்த சம்பவத்தின்போது, கொல்லப்பட்ட இருவரின் கைகளிலும் விலங்கு போடப்பட்டிருந்தது. அதனால் அவர்களால் துப்பாக்கி குண்டுகளிடமிருந்து தப்ப முடியவில்லை எனத் தெரிகிறது. பொது வெளியில் நடந்த இந்த படுகொலை சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாக கடுமையாக குற்றம்சாட்டினர்.
இதைத்தொடர்ந்து துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய லவ்லேஷ் திவாரி, மோஹித் என்ற சன்னி, அருண் குமார் மயூரா ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். பரபரப்பான இந்த கொலைகள் தொடர்பாக உயர்மட்ட விசாரணைக்கு உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டது. மூன்று பேர் கொண்ட சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், அடிக் அகமது மற்றும் அஷ்ரஃப் கொலை சம்பவத்தின்போது, பணியிலிருந்த காவல் துறையினர் 5 பேர் அலட்சியமாக இருந்ததாக சிறப்பு புலனாய்வுக்கு அறிக்கை அளித்தது. அதன் அடிப்படையில், ஐந்து போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்துள்ளார். ஷாகஞ்ச் காவல் நிலையப் பொறுப்பாளர் அஸ்வனி குமார் சிங், ஒரு உதவி ஆய்வாளர் மற்றும் மூன்று காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: அடிக் அகமது கொலை வழக்கு - துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் குடும்பம் தலைமறைவு!