லக்னோ: உத்தரப் பிரதேசம் லக்கிம்பூரில் நேற்று (அக்.3) ஒன்றிய இணை அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் காரில் சென்றபோது உழவர்கள் கறுப்புக் கொடி காட்ட முயற்சித்துள்ளனர். அப்போது உழவர்கள் மீது அமைச்சரின் மகன் காரை ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
இதில் நான்கு உழவர்கள் உயிரிழந்ததாக சம்யுக்தா கிசான் மோச்சார் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். இந்தச் சம்பவத்தால் ஆத்திரமடைந்த உழவர்கள் அமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஸ் மிஸ்ராவின் காரை தீயிட்டு கொளுத்தினர். இந்த மோதலில் மேலும் நான்கு பேர் என மொத்தம் எட்டு பேர் உயிரிழந்தனர்.
ஒரு கோடி ரூபாய் நிவாரணம்
இதுகுறித்து, பாஜக மக்களவை உறுப்பினரான வருண் காந்தி உத்தரப் பிரேதச முதலமைச்சர் யோகி ஆதித்தயநாத்துக்கு எழுதியுள்ள கடித்தத்தில்," போராட்டம் நடத்தும் விவசாயிகள் நம் நாட்டின் குடிமக்கள்தான்.
விவசாயிகள் தங்களின் பிரச்சினைகளுக்கு ஜனநாயக ரீதியில் போராடும் போது, நாம் மிகுந்த கட்டுப்பாட்டுடனும், பொறுமையோடும் அவற்றை அணுக வேண்டும். நாம் காந்தி வழியிலும், சட்டப்படியான ஜனநாயாக முறையிலும்தான் விவசாயப் பிரச்சினைகளை கையாள வேண்டும்.
இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டோரை உடனடியாக கண்டுபிடித்து, கொலை வழக்கு ஐபிசி பிரிவு 302-இன்படி கைதுசெய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
இதுகுறித்த விசாரணையை துரிதப்படுத்த உச்ச நீதிமன்றத்தால் கண்காணிக்கப்படும் சிபிஐ விசாரணையை அமைக்கலாம். இந்த வன்முறையில் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ. 1 கோடி வழங்க வேண்டும்" எனப் பரிந்துரைத்துள்ளார். வருண் காந்தி, உத்தரப் பிரதேசம் மாநிலம் பிலிபித் மக்களவை உறுப்பினராக உள்ளார்.
இதையும் படிங்க: உ.பி வன்முறை - சரமாரி கேள்வியெழுப்பிய பிரியங்கா காந்தி