கடந்த 10 நாள்களில், ஹரியானா மாநிலம், பால்வால் மாவட்டத்தைச் சுற்றியுள்ள சில்லி கிராமத்தில் 11 குழந்தைகளும், சாயின்சாவில் எட்டு குழந்தைகளும், சவுண்டில் ஐந்து குழந்தைகளும் உயிரிழந்துள்ளனர். இந்தத் தொடர் உயிரிழப்பு சம்பவங்கள் அப்பகுதி கிராமத்தினரிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து உயிரிழந்த சிறுமி ஒருவரின் குடும்பத்தினர் கூறுகையில், இரண்டு நாள்கள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நல்ஹாட் மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்காக குழந்தை அனுமதிக்கப்பட்டதாகவும், சிகிச்சையின்போதே குழந்தை உயிரிழந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.
மர்மக் காய்ச்சலின் பிடியில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள்
ஒரு மைக்ரோ லிட்டர் ரத்தத்திற்கு 1,50,000 முதல் 4,50,000 வரை பிளேட்லெட்கள் சாதாரணமாக இருக்க வேண்டிய நிலையில், சமீபத்தில் ஹதீன் தனியார் மருத்துவமனையில் உயிரிழந்த சிறுமிக்கு 90,000க்கும் குறைவாகவே பிளேட்லெட்கள் இருந்ததும் கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிறுமிக்கு சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனையில் அவர் டெங்கு காரணமாக உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கிராமத்தில் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் தற்போது இந்த மர்மக் காய்ச்சலின் பிடியில் உள்ளதாக கிராமவாசிகள் வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து தற்போது அம்மாநில சுகாதாரத் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: கலவர பூமியான லக்கிம்பூர் கேரி - நான்கு கம்பேனி படையினர் குவிப்பு