சம்பா: இமாச்சலப்பிரதேச மாநிலம் சம்பா மாவட்டத்தில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தில் காவலர்கள் உட்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ள நிலையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்குத் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் மலைப்பாங்கான பகுதிகளில் சமீப காலமாக அதீத விபத்துகள் ஏற்படுவதாக அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர்.
சம்பா மாவட்டத்தின் டீசா பகுதியிலிருந்து பைராகர் செல்லும் வழியில் பலேரோ வாகனம் ஒன்று பயணித்துள்ளது. மலைப்பாங்கான அந்த வழியில் தர்வாய் என்ற பகுதியை நெருங்கியபோது தீடிரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம் சுமார் நூறு அடி ஆழமுள்ள பள்ளத்தாக்கில் கவிழ்ந்துள்ளது. சம்பவம் குறித்து விபத்தைப் பார்த்த சிலர் காவல்துறைக்குத் தகவல் அளித்துள்ளனர்.
இதையும் படிங்க: 5வது சுற்றுவட்ட பாதைக்கு உயர்ந்த சந்திரயான்-3 விண்கலம்; இஸ்ரோ வெளியிட்ட புதிய தகவல்!
உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் விபத்தில் சிக்கியர்களையும், வாகனத்தையும் மீட்டெடுக்க முயற்சித்துள்ளனர். நீண்ட, நெடிய போராட்டத்திற்குப் பிறகு விபத்தில் சிக்கியவர்களை போலீஸார் மீட்ட நிலையில் அதில் பயணித்த 6 காவலர்கள் மற்றும் வாகன ஓட்டுநர் உட்பட 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கி படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வந்த 3 பேரை போலீஸார் உயர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
இந்த வழக்கு குறித்து தகவல் அறிந்த சூரா விதான்சபா பகுதி சட்டமன்ற உறுப்பினர் ஹன்ஸ்ராஜ் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டு விபத்துக்கான காரணம் குறித்துக் கேட்டறிந்தார். தொடர்ந்து விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!
இமாச்சலப்பிரதேசத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் அடிக்கடி இதுபோன்ற விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அச்சத்திற்கு ஆளாகியுள்ளனர். மேலும், இதுபோன்ற விபத்துக்களைத் தவிர்க்கத் தேவையான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகமும், அரசு அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என சமூக ஆர்வலர்கள் பலர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மறுபுறம் மலைபாங்கான சாலைகளில் வாகன ஓட்டிகள் வேகத்தைக் கட்டுக்குள் வைத்துப் பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். சாலை விபத்தில் ஒட்டுமொத்தமாக 7 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சரக்கு லாரி மீது மினி லாரி மோதி விபத்து - 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு!