மும்பை: ரிலையன்ஸ் நிறுவன உரிமையாளரும் ஆசியாவின் நம்பர் 1 பணக்காரருமான முகேஷ் அம்பானி, மும்பை அல்டாமவுன்ட் சாலையில் 4 லட்ச சதுர அடி பரப்பிலான ஆன்டிலியா' என்ற சொகுசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், அவரின் வீட்டின் முன்பு இரண்டு அடையாள தெரியாத நபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கைகளில் பைகளுடன் நடமாடியதாக நமது ஈடிவி பாரத் ஊடகத்திடம் தகவல்கள் தெரிவித்துள்ளன.
டாக்ஸி ஓட்டுநரின் தகவல்
அப்பகுதியில் டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் அளித்த தகவலின் பேரில் காவல் துறையினர் அம்பானி வீட்டிற்குப் பலத்த பாதுகாப்பு அளித்து வருகின்றனர். இதுகுறித்து மும்பை காவல் துறை தரப்பில் கூறுகையில்,"முகேஷ் அம்பானியின் ஆன்டிலியா வீட்டின் அருகே இரண்டு நபர்கள் சந்தேகத்துக்குரிய வகையில் கையில் பைகளுடன் நடமாடியதாக டாக்ஸி ஓட்டுநர் ஒருவர் தகவல் கொடுத்தார்.
இதனையடுத்து, அவரின் வீட்டிற்கு வெளியே பாதுகாப்பிற்காகக் காவலர்கள் குவிக்கப்பட்டு, அப்பகுதி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து வருகிறோம். துணை காவல் ஆணையர் நிலையிலான அலுவலர் இவ்விவகாரத்தைக் கண்காணித்து வருகிறார்" என்றனர்.
இதற்கு முன்னர் இதேபோன்று...
கடந்த பிப்ரவரி 25ஆம் தேதி முகேஷ் அம்பானியின் இதே வீட்டின் முன் வெடிபொருள்கள் நிரப்பிய வாகனம் நிறுத்தப்பட்டிருந்த சம்பவம் பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தின் மூளையாக மும்பை குற்றப்பிரிவு காவலர் சச்சின் வாசே செயல்பட்டார் என விசாரணையில் தெரியவந்ததையடுத்து, தேசிய குற்றப்பிரிவு காவலர்கள் (என்ஐஏ) அவரை கைது செய்தனர்.
இவ்வழக்கின் குற்றப்பத்திரிகையில்," வெடிகுண்டு பரபரப்பை ஏற்படுத்தி அம்பானியிடம் பணம் பறிக்கவே வெடிபொருள் கொண்ட வாகனத்தை அவரின் வீட்டின் முன் சச்சின் வாசே நிறுத்தியுள்ளார்" என என்ஐஏ குறிப்பிட்டுள்ளது. இதையடுத்து, மும்பை காவல் ஆணையர் பரம்வீர் சிங் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
அப்போது முதலமைச்சர் உத்தவ் தாக்கரேவுக்கு பரம்வீர் சிங் எழுதிய கடிதத்தில்,"உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக், பார்கள், விடுதிகள் மூலம் ஒரு மாதத்திற்கு 100 கோடி ரூபாய் வசூலிக்குமாறு சச்சின் வாசேயிடம் கூறியுள்ளார்" எனக் குறிப்பிட்டிருந்தார்.
சிக்கிய அமைச்சர்
இதன்பின்னர், அமைச்சர் அனில் தேஷ்முக் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. அதன் தொடர்ச்சியாகப் பணப்பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து, மும்பை, நாக்பூரில் உள்ள அனில் தேஷ்முக் வீடுகளில் சோதனை மேற்கொண்டது.
இதையடுத்து, நவ. 1ஆம் தேதி மும்பை அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜரான அனில் தேஷ்முக், நீண்டநேர விசாரணைக்குப் பிறகு அன்றே கைதுசெய்யப்பட்டார். மேலும், அவரை நவம்பர் 12ஆம் தேதிவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத்துறைக்கு மும்பை உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் (நவ. 7) அனுமதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: லண்டனுக்கு நோ சொன்ன அம்பானி; எப்போதும் இந்தியாதான்...