தேவனகிரி: பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்ற மர்ம நபரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். ஜிஎம்ஐடி வளாகம் நோக்கி திறந்த வெளி வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். சாலையின் இரு புறங்களில் இருந்து மலர் தூவி பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது சாலையின் ஓரத்தில் நின்ற இளைஞர், பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஊர்வலத்திற்குள் நுழைய முயன்றார். பிரதமர் மோடியின் வாகனத்தை நோக்கி இளைஞர் நெருங்கி வருவதை கண்ட எஸ்பிஜி மற்றும் போலீசார், பாதுகாப்பு படையினர் அவரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிரதமர் வாகனத்தை நோக்கி ஓடி வந்த இளைஞரை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர் கோப்பல் பகுதியைச் சேர்ந்த பசவராஜா என்பது தெரிய வந்தது. என்ன காரணத்திற்காக இளைஞர் பிரதமரின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கூடுதல் டிஜிபி, அலோக் குமார், "இளைஞரால் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. அதேநேரம், பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவதற்குள் இளைஞர் தடுத்து நிறுத்தப்பட்டார். என்ன காரணத்திற்காக இளைஞர் பாதுகாப்பு வளையத்தை மீற முயன்றார் என விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.
இதற்கு முன்னர் பிரதமர் மோடி கர்நாடகா வந்த போதும் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. கடந்த ஜனவரி 12ஆம் தேதி ஹூப்ளி வந்த பிரதமர் மோடி, இதேபோல் திறந்த வெளியில் ஊர்வலமாக சென்றார். ஹூப்ளி சாலையின் இரு புறத்தில் நின்றும் பிரதமர் மோடியை வரவேற்க ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு இருந்தனர்.
மக்கள் கூட்டத்தை அடுத்து காரின் பக்கவாட்டில் நின்ற படி, பிரதமர் மோடி அனைவருக்கும் கையசைத்து நன்றி தெரிவித்தார். பிரதமர் மோடியின் மீது பூக்களை வீசி திரளான மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். சாலையின் இருமருங்கிலும் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசாரின் தடுப்புகளை தாண்டிய மர்ம நபர், அவ்வளவு பாதுகாப்பு அம்சங்களையும் மீறி திடீரென பிரதமர் மோடியை நெருங்கினார். இதையடுத்து சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரிகள், மர்ம நபரை பிடித்து விலக்க முயன்றனர். பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைந்த நபர் பிரதமர் மோடியிடம் மாலை கொடுத்தார்.
தொண்டர் கொடுத்த மாலையை பிரதமர் மோடி பெற்றுக் கொண்ட நிலையில் அவரை பாதுகாப்பு படையினர் அகற்றினர். இந்நிலையில் மீண்டும் பிரதமரின் பயணத்தில் பாதுகாப்பு குளறுபடி நடைபெற்று உள்ளது.
இதையும் படிங்க: காங்கிரஸ் கட்சிக்கு தைரியம் இருந்தால் என் மீது வழக்கு போடட்டும் - குஷ்பு ஆவேசம்