டெல்லி: 2023-24 நிதி ஆண்டுக்கான பட்ஜெட் கூட்டத் தொடர் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையுடன் கடந்த ஜனவரி 31ஆம் தேதி தொடங்கியது. தொடர்ந்து பிப்ரவரி 1ஆம் தேதி மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2023-24 ஆம் நிதி ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை தாக்கல் செய்தார்.
அதானி குழுமம் மீதான அமெரிக்க ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பெர்க் தாக்கல் செய்த ஆய்வறிக்கை நாடாளுமன்றத்தில் எதிரொலித்தன. அதானி குழும விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைக்கு பிறகு நாடாளுமன்றம் சாதாரண நிலையை எதிர்கொண்டது.
தொடர்ந்து குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீா்மானத்தின் மீது விவாதம் நடத்தப்பட்டு, அதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் பிரதமா் மோடி பதில் அளித்தாா். தொடர்து பட்ஜெட் மீதான விவாதங்களுக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில் அளித்தார்.
இதையும் படிங்க: Oscar Award 2023: பிரதமர் மோடி, முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து!
இதையடுத்து கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் கட்ட கூட்டம்ம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது கட்டம் இன்று (மார்ச்.13) தொடங்கியது. கூட்டத் தொடர் தொடங்கியதும் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், லண்டன் விழாவில் இந்திய ஜனநாயகம் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்ததற்கு கண்டனம் தெரிவித்தார்.
அண்மையில் லண்டனில் நடந்த தனியார் நிகழ்வில் கலந்து கொண்ட ராகுல் காந்தி, இந்தியா ஜனநாயகத்தின் அடித்தளம் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளதாகவும், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சி எம்.பி.க்கள் பேசும் மைக் ஆஃப் செய்யப்படுவதாகவும் தெரிவித்தார். இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இந்த பிரச்சினையை கையில் எடுத்து ஆளும் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர். மக்களவையில் மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷியும், மாநிலங்களவையில் பியூஷ் கோயிலும், இந்த விவகாரத்தில் ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என பேசினர். இதனால் நாடாளுமன்றத்தில் கடும் அமளி ஏற்பட்டது.
இதையடுத்து நாடாளுமன்றம் நண்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்ப்பட்டது. அவையை விட்டு வெளியேறிய எதிர்க் கட்சி உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தில் உள்ள காந்தி சிலையின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அதானி விவகாரம், புலனாய்வு ஏஜென்சிகளை மத்திய அரசு தவறாக கையாளுவதாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர்.
இதையும் படிங்க: நடுவானில் திடீர் பிரச்சினை - பாகிஸ்தானில் தரையிறங்கிய இந்திய விமானம்..! நடந்தது என்ன?