சென்னை: நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள “மாவீரன்” படத்தின் படப்பிடிப்பு முடிந்த நிலையில்,அடுத்த மாதம் திரைக்கு வர தயாராகவுள்ளது. அதனால், படத்திற்கான புரொமோஷனில் ஈடுப்பட்டுள்ளது பட குழு. இதை தொடர்ந்து முதல் பாடல் வெளியான நிலையில் இரண்டாவது சிங்கிள் பாடல் நாளை(ஜூன் 14) வெளியாகிறது என தெரிவித்துள்ளது.
ஜூலை 14 ஆம் தேதி வெளியாகவுள்ள 'மாவீரன்' படத்தை 'மண்டேலா' என்னும் ஹிட் படத்தை கொடுத்து தேசிய விருது பெற்ற இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கி உள்ளார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.தமிழ் மட்டும் இன்றி இப்படம் தெலுங்கிலும் ஒரே நாளில் வெளியாக உள்ளது.மாவீரன் படம் தெலுங்கில் 'மாவீருடு' என்ற பெயரில் வெளியாகும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
இப்படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, தெலுங்கு நடிகர் சுனில், இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.இப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.இப்படத்திற்கு மண்டேலா மற்றும் ஆடை படத்தின் இசையமைப்பாளர் பரத் சங்கர் இசை அமைத்துள்ளார். முன்னதாக இப்படத்தில் இருந்து சீனா சீனா என்ற பாடல் வெளியாகி மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இந்த நிலையில் தற்போது இதன் இரண்டாவது பாடலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பரத் சங்கர் இசையில் யுகபாரதி எழுதியுள்ள வண்ணாரப்பேட்டையிலே என்ற பாடல் உருவாகியுள்ளது.
இதையும் படிங்க:மேடம் நீங்களா..? ஷர்மிளாவுக்கு ஷாக் கொடுத்த வானதி.. கோவை பேருந்தில் கலகல பயணம்!
இப்பாடலை சிவகார்த்திகேயன் மற்றும் அதிதி சங்கர் இணைந்து பாடியுள்ளனர். இதுகுறித்த வீடியோ வெளியாகி வைரல் ஆகி வருகிறது. இந்நிலையில் இப்பாடல் நாளை (14.06.2023) காலை 11 மணிக்கு வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.சின்னதிரையில் இருந்து வெள்ளிதிரைக்கு வந்த சிவகார்த்திகேயன் நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமையுடன் வலம் வருகிறார். கரோனா காலகட்டத்தில் இவரது டாக்டர் படம் வெளியாகி ரசிகர்களை மீண்டும் திரையரங்குகள் நோக்கி படையெடுக்க வைத்தது. டாக்டர், டான் என அடுத்தடுத்து நல்ல வசூல் படங்களை கொடுத்துள்ளார்.
சிவகார்த்திகேயன் பாடிய பாடல்கள் அனைத்துமே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அதிதி சங்கர் தனது முதல் படமான விருமன் படத்திலும் ஒரு பாடல் பாடியிருந்தார். மதுர வீரன் என்ற அந்த பாடலும் வெற்றி பெற்றது குறிப்பிடத் தக்கது.
இதையும் படிங்க:V Senthil Balaji: செந்தில் பாலாஜியின் அரசு இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை!