ஆங்கில கேள்விக்கு இந்தியில் பதிலளித்த ஜோதிராதித்ய சிந்தியா! - சசி தரூர்
சசி தரூர் ஆங்கிலத்தில் கேள்வி கேட்ட நிலையில், ஜோதிராதித்ய சிந்தியா இந்தியில் பதிலளித்தது நாடாளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது.
டெல்லி : குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் போது பேசிய திருவனந்தபுரம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர் சசி தரூர் வினா ஒன்றை எழுப்பினார்.
இதற்கு விமானப் போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா இந்தி மொழியில் பதிலளித்தார். இது, 'அவமதிப்பு' எனக் கூறி சசி தரூர் எதிர்ப்பு தெரிவித்தார்.
சசி தரூருக்கு ஆதரவாக தமிழ்நாடு உறுப்பினர்களும் சில துணை கேள்விகளை எழுப்பியிருந்தனர். இதற்கும் ஜோதிராதித்ய சிந்தியா இந்தியிலே பதில் கொடுத்தார். இதனால் அவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இது குறித்து பேசிய சசி தரூர், ஜோதிராதித்ய சிந்தியா நன்கு ஆங்கிலம் பேசுவார். அவர் ஆங்கிலத்தில் பதிலளிக்கட்டும் என்றார்.
மேலும், “தயைக் கூர்ந்து இந்தியில் பதில் அளிக்காதீர், ஆங்கிலத்தில் பதில் அளியுங்கள், எனக்கு அவமானமாக உள்ளது” எனப் பேசினார். இதைக் கேட்டு கோபமுற்ற ஜோதிராதித்ய சிந்தியா, “ஏன் இப்படி நடந்துகொள்கிறீர்கள். அவையில் ஒரு மொழிப்பெயர்பாளர் இருக்கிறார். அவர் மொழிப்பெயர்த்து கூறுகிறாரே” என்றார்.
அப்போது சபாநாயகர் ஓம் பிர்லாவும் குறுக்கிட்டு, “மரியாதைக்குரிய சசி தரூர், இந்தியில் பதில் அளிப்பது அவமானம் அல்ல” என்றார். இதனால் மக்களவையில் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது.
ஜோதிராதித்ய சிந்தியாவும், சசி தரூரும் முன்னர் ஒரே கட்சியில் பயணித்தவர்கள் ஆவார்கள் என்பது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : DMK boycotted in lok sabha: நீட் மசோதா விவகாரம்; மக்களவையில் திமுக அமளி!