கோலர் : கர்நாடக மாநிலம் கோலர் மாவட்டம் மலூர் தாலூகா பகுதியில் உண்டு உறவிடப் பள்ளி இயங்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் இந்த பள்ளியில் பயிலும் ஏழாம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரயிலான 6 மாணவர்கள், பள்ளி விடுதியின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்வது போன்ற வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வேகமாக பரவியது.
இந்த வீடியோ வைரலான நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர் கோரிக்கைகள் எழுந்தன. இந்நிலையில், சம்பவம் நடந்த பள்ளியில் சமூக நலத் துறை இணை இயக்குநர் ஆய்வு நடத்தினார். தொடர்ந்து அவர் அளித்த புகாரின் அடிப்படையில் இரண்டு வெவ்வேறு வழக்குகளை போலீசார் பதிவு செய்து உள்ளனர்.
இதுகுறித்து போலீசார் கூறுகையில் பட்டியலின மாணவர்களை விடுதி செப்டிக் டேங்க்கை கழுவ வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதேபோல், பாலியல் தொல்லை தொடர்பாக பள்ளி ஆசிரியர்கள் மீது கிடைக்கப் பெற்ற புகரில் வழக்குப் பதிவு செய்து இரண்டு ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர், விடுதி பொறுப்பு வார்டன் மற்றும் ஊழியர் என மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும், பாலியல் தொல்லை தொடர்பான வழக்கில் இரண்டு ஆசிரியர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் கூறுகையில், செப்டிக் டேங்க் கழுவிய விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 6 மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும், அந்த விடுதியில் நிரந்தர வார்டன் இல்லாத நிலையில், பொறுப்பு வார்டன் முனியப்பா, பள்ளி தலைமை ஆசிரியர் உள்பட மூன்று பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது என்று தெரிவித்தனர்.
முன்னதாக இந்த விவகாரம் தொடர்பாக பசனகவுடா பாஜக எம்.எல்.ஏ ஆர் பாடீல், பட்டியலின மாணவர்களை கொண்டு விடுதியின் செப்டிக் டேங்கை சுத்தம் செய்ய வைத்தது மனிதாபிமானமற்ற செயல் என்றும் இந்த சம்பவத்தில் தொடர்புடைய அனைவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசுக்கு கோரிக்கை விடுத்து இருந்தார்.
இதையும் படிங்க : கர்நாடகாவில் பள்ளி மாணவர்கள் விடுதி செப்டிக் டேங்க் கழுவிய விவகாரம் - அரசின் நடவடிக்கை என்ன?