மகாராஷ்டிரா மாநிலம், யவத்மால் மாவட்டம் புல்சவாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் ஷேக் இஸ்மாயில் ஷேக் இப்ராஹிம் (24). 8 ஆம் வகுப்புடன் பள்ளி செல்வதை நிறுத்திகொண்ட இஸ்மாயில், தனது சகோதரனின் காஸ் வெல்டிங் கடையில் வேலை செய்யத் தொடங்கினார்.
அங்கு, ஸ்டீல், அலுமினியம் தகடுகளைக் கொண்டு அலமாரி, கூலர்கள் உள்ளிட்ட பொருள்களை தயாரிக்க கற்றுக்கொண்டார். பின்னர் , 3 இடியட்ஸ் திரைப்படத்தில் வரும் ராஞ்ச்சோ கதாபாத்திரத்தால் ஈர்க்கப்பட்ட இப்ராஹிம், ஹெலிகாப்டர் தயாரிக்க முடிவு செய்தார்.
யூடியூப்பில் வீடியோ பார்த்து ஹெலிகாப்டர் செய்திடக் கற்கத் தொடங்கினார். காலையில் கடையில் வேலை பார்க்கும் அவர், இரவு நேரத்தில் ஹெலிகாப்டர் செய்யும் வேலையில் ஈடுபட்டு வந்தார்.
2 ஆண்டுகளில் வெற்றிகரமாக ஹெலிகாப்டரை உருவாக்கிய அவர், வரும் சுதந்திர தினத்தன்று அதனை ஊர்மக்கள் முன்னிலையில் பறக்கவிட ஆசைப்பட்டார். அந்த ஹெலிகாப்டருக்கு முன்னா ஹெலிகாப்டர் எனப் பெயரிட்டார்.
கடந்த ஆகஸ்ட் 11 ஆம் தேதி, ஹெலிகாப்டரின் இருக்கையில் அமர்ந்து பறக்கும் சோதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஒரு இறக்கை மற்றொரு இறக்கையின் மீது இடித்து உடைந்தது. அதில் உடைந்த ஒரு பாகம் இப்ராஹிமின் தொண்டையில் வெட்டியதில் அவர் நிலைகுலைந்து சாய்ந்து விழுந்தார்.
பதறிப்போன நண்பர்களும், குடும்பத்தினரும் இப்ராஹிமை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
எப்போதும் ஹெலிகாப்டர் சோதனையின் போது ஹெட்போன், ஹெல்மெட் அணியும் இப்ராஹிம், அன்று மட்டும் எதுவும் அணியாமல் சோதனையில் ஈடுபட்டது தான் உயிரிழப்பதற்குக் காரணமாக அமைந்துவிட்டது என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது குறித்து புல்சவாங்கி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆளே இல்லாமல் தனியாக வந்த பைக்: அதிர்ச்சி காணொலி