உத்தரபிரதேசம்: வாரணாசியில் காசி விஸ்நாதர் கோயில் அருகே உள்ள ஞானவாபி மசூதி வளாகத்தில் இந்து தெய்வங்கள் இருப்பது தொடர்பான வழக்கில், நீதிமன்ற உத்தரவுப்படி மசூதி வளாகத்தில் கள ஆய்வு நடத்தப்பட்டது.
தொடர்ந்து மூன்று நாட்களாக நடைபெற்ற கள ஆய்வு நிறைவு பெற்றது. இன்றைய ஆய்வில், ஞானவாபி மசூதி வளாகத்தில் சிவலிங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மனுதாரர்களான இந்துக்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. சிவலிங்கம் கிடைத்த பகுதிக்கு சீல் வைக்க வேண்டும் என மனுதாரர்கள் கோரிக்கை வைத்தனர். அதை ஏற்ற வாரணாசி நீதிமன்றம், குறிப்பிட்ட பகுதிக்கு சீல் வைக்கும்படி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.
இதையடுத்து அப்பகுதிக்குச் சீல் வைக்கப்பட்டது. அங்கு யாரும் செல்லக் கூடாது என்றும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கள ஆய்வு நிறைவு பெற்ற நிலையில், இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நாளை விசாரணைக்கு வரவுள்ளது.
மசூதியில் நடத்தப்பட்ட கள ஆய்வு குறித்து ஆய்வுக்குழு நாளை அறிக்கை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மசூதி வளாகத்தில் சிவலிங்கம் கிடைத்ததால், மசூதி உள்ள இடம் காசி விஸ்வநாதர் கோயிலுக்குச் சொந்தமானது என்று மனுதாரர்கள் கூறி வருகின்றனர்.