டெல்லி: தலைநகர் டெல்லியில் மதுபான கொள்கை திருத்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறி சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியாவை கைது செய்த அமலாக்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த வழக்கில் தெலங்கானா முதலமைச்சர் கேசிஆரின் மகளும், எம்எல்சியுமான கவிதாவுக்கு தொடர்பு இருப்பதாக கூறி அமலாக்கத்துறை தாக்கல் செய்த குற்றப்பத்திரிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக விசாரணைக்கு ஆஜராகுமாறும் எம்.எல்.சி கவிதாவுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியது.
கடந்த மார்ச் 11 ஆம் தேதி ஆஜரான கவிதாவிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மார்ச் 16 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு ஆஜராகுமாறு அமலாக்கத் துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர். இருப்பினும் மார்ச் 16 ஆம் தேதி தன்னால் ஆஜராக இயலாது என எம்.எல்.சி கவிதா, அமலாக்கத் துறைக்கு கடிதம் அனுப்பினார்.
இதையடுத்து கடந்த மார்ச். 20 ஆம் தேதி அமலாக்கத் துறை விசாரணைக்கு கவிதா ஆஜரானார். டெல்லி விஜய் சவுக்கில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்தில் வந்த எம்எல்சி கவிதாவிடம் 10 மணி நேரம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். தொடர்ந்து மார்ச். 21 ஆம் தேதியும் அமலாக்கத்தூறை விசாரணைக்கு கவிதா ஆஜரானார்.
இதனிடையே டெல்லி மதுபான கொள்ளை திருத்த வழக்கில் தனக்கு எதிரான அமலாக்கத் துறையின் விசாரணையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் எம்எல்சி கவிதா மனுத் தாக்கல் செய்து உள்ளார். இந்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கடந்த 15ஆம் தேதி நீதிபதிகள் உத்தரவாதம் அளித்தனர்.
தொடர்ந்து இன்று இந்த மனு விசாரிக்க பட உள்ளது. நீதிபதிகள் அஜெய் ரஸ்தோகி, பிலா எம் திரிவேதி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த மனுவை விசாரிக்கின்றனர். முன்னதாக இந்த மனுவில் எம்.எல்.சி கவிதா, பெண்களுக்கான உரிமைகளை அமலாக்கத்துறை மீறுவதாகவும், இந்த வழக்கில் தனது வீட்டில் அல்லது வீடியோ கான்பிரன்சிங் மூலம் அமலாக்கத்துறை விசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென தெரிவித்து உள்ளார்.
மேலும், சிஆர்பிசி சட்டத்தின் 160வது பிரிவை மீறி இந்த வழக்கில் விசாரணைக்காக அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு அழைக்கப்பட்டதாக கவிதா தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் மன மற்றும் உடல் ரீதியிலான பிரச்சினைகளுக்கு உள்ளாக்கியதாக கவிதா மனுவில் தெரிவித்து உள்ளார்.
மேலும் விசாரணையின் போது அமலாக்கத்துறை அதிகாரிகள் நடந்து கொண்ட விதம் அதிர்ச்சி அளிப்பதாக இருந்ததாகவும் தன் மனுவில் கவிதா தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: ராகுல் காந்தி தகுதி நீக்கம்: தொடரும் சங்கல்ப் சத்தியாகிரகம்! கருப்பு பட்டை அணிந்து எம்.பிக்கள் போராட்டம்!