டெல்லி: தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றிய அரசாணைகள் மற்றும் மசோதாக்களுக்கு அனுமதி வழங்கக் காலம் தாழ்த்துவதாக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி மீது தமிழ்நாடு அரசு வழக்கு தாக்கல் செய்தது.
அதில், "இந்திய அரசியல் அமைப்பின் 32வது பிரிவின் படி தமிழ்நாடு ஆளுநர் மீது தமிழ்நாடு அரசு வழக்கினை உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ளது. இந்திய அரசியல் அமைப்பு 32வது பிரிவு என்பது அரசியலமைப்பு சட்டத்தை மீறிச் செயல்படுவது, செயலற்ற தன்மை, புறக்கணிப்பு மற்றும் தாமதம் போன்ற செயல்களில் ஈடுபட்டுவருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு சட்டசபையில் நிறைவேற்றிய 12 மசோதாக்கள் தமிழ்நாடு ஆளுநர் ஒப்புதல் அனுப்பிப் பல மாதங்கள் ஆகியும் தற்போது வரை ஒப்புதல் அளிக்கவில்லை. இதில், குறிப்பாகத் தமிழ்நாடு ஆளுநர் கையெழுத்திடாமல் வைத்து இருக்கும் அரசு ஊழியர்கள் மீதான ஊழல் குற்றங்கள் குறித்த விசாரணை மற்றும் விசாரணைக்கான அனுமதி, பல வருடங்களாகச் சிறையில் இருக்கும் கைதிகளில் முன்கூட்டி விடுதலை செய்வது, தினசரி மனுக்கள், பணி நியமன ஆணைகள், அமைச்சர்கள் மற்றும் எம்எல்ஏ மீதான வழக்குகளை சிபிஐக்கு மாற்றுவது, உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றுவது போன்று 2020 முதல் 2023ஆம் ஆண்டு வரை 12 மசோதாக்கள் தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. ஆனால், பல மாதங்களாக இவை நிலுவையில் உள்ளது. இதனால் தமிழ்நாடு அரசின் ஒட்டு மொத்த நிர்வாகமும் முடங்கியுள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு அனுப்பும் மசோதாக்களைக் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழ்நாடு ஆளுநர் அனுமதி அளிக்க உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறப்பட்டு இருந்தது.
இந்த வழக்கு இன்று (நவ.10) உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி.பர்டிவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, மூத்த வழக்கறிஞர்கள் அபிஷேக் மனு சிங்வி, முகுல் ரோகத்கி, பி.வில்சன் ஆகியோர் தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜராகி, "அரசியலைப்பு சட்டப்பிரிவு 200ன் படி ஆளுநர் மசோதாக்களுக்கு அனுமதி வழங்க வேண்டும் அல்லது திருப்பி அனுப்ப வேண்டும்." எனத் தெரிவிக்கப்பட்டது.
இதனையடுத்து நீதிபதிகள், 12 மசோதாக்கள் நிலுவையில் உள்ளது என்பதை மிக முக்கிய பிரச்சனையாகப் பார்க்க வேண்டியுள்ளது. எனவே, வழக்கு குறித்து மத்திய அரசிற்கு நோட்டீஸ் வழங்கி பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கு விசாரணை நவம்பர் 20ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். மேலும், இந்த வழக்கின் உதவிக்காக இந்திய அரசின் அட்டர்னி ஜெனரல் அல்லது இந்திய அரசின் சொலிசிட்டர் ஜெனரல் ஆஜராக உத்தரவிட்டுள்ளனர்.
இதையும் படிங்க: அதிமுக கொடி, சின்னம் பயன்படுத்த தடை.. ஓபிஎஸ் மேல்முறையீட்டு மனு நவ.15-இல் விசாரணை!