டெல்லி: பிலிகுண்டுலுவிலிருந்து 15 நாட்கள் தமிழகத்திற்கு 5,000 கன அடி நீரை செப்டம்பர் 13ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை கர்நாடக அரசு திறந்து விட வேண்டும் என காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவில் தலையிட விரும்பவில்லை எனக் கூறி கர்நாடக அரசின் மேல்முறையீட்டை விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.எஸ்.நரசிம்ஹா மற்றும் பிரசாந்த் குமார் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று (செப்.21) விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், “காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தில் பல நீர்வள மேலாண்மை மற்றும் விவசாயத் துறையில் உள்ள நிபுணர்கள் உள்ளனர்.
இந்த ஆண்டு மழை மற்றும் தண்ணீர் பற்றாக்குறை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு காவிரி நீர் 15 நாட்கள் திறந்து விட வேண்டும் என காவிரி மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது. இதனை நீதிமன்றம் கண்காணித்து வருகிறது” எனத் தெரிவித்தனர்.
இதனையடுத்து, “தமிழ்நாடு அரசின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் ஆய்வின்படி 6,400 கன அடி நீர் திறக்கப்பட வேண்டும். அதனை 5,000 கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு வறட்சியின் காரணமாக மூன்றில் ஒரு பங்கு தண்ணீர் மட்டுமே திறக்க காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவிட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
கர்நாடக அரசின் சார்பில் மூத்த வழக்கறிஞர் ஷியாம் திவான் ஆஜராகி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவு கர்நாடக அரசுக்கு எதிரானது என்றும், எனவே இதனை எதிர்த்து மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது எனவும், வடகிழக்கு பருவமழை இந்த வருடம் சரியாகக் கிடைக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதனையடுத்து நீதிபதிகள், ‘காவிரி நீர் ஒழுங்காற்று குழு மற்றும் காவிரி நீர் மேலாண்மை ஆணையம் விரிவான பதில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. எனவே உத்தரவுகளில் உச்ச நீதிமன்றம் தலையிட விரும்பவில்லை எனத் தெரிவித்து தமிழ்நாடு அரசு தரப்பில் 7,200 கன அடி நீர் திறந்து விட வேண்டும் என்ற மேல்முறையீட்டு மனுவையும், கர்நாடகா அரசு தரப்பில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவையும் விசாரணை செய்ய மறுப்பு தெரிவித்தனர்.
மேலும், காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி செப்டம்பர் 27ஆம் தேதி வரை தமிழ்நாட்டிற்கு 5,000 கன அடி தண்ணீர் திறந்து விட உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க : வாடகை கார் ஓட்டுநர் வங்கியில் டெபாசிட்டான ரூ.9ஆயிரம் கோடி.. இன்ப அதிர்ச்சியில் மிரண்டு போன ஓட்டுநர்!