டெல்லி: 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தூத்துக்குடி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்ட கனிமொழி, சுமார் 3.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கனிமொழியின் வெற்றியை எதிர்த்து, அதே தொகுதியைச் சேர்ந்த வாக்காளரான சந்தானகுமார் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
கனிமொழி வேட்புமனுவில் சிங்கப்பூர் குடியுரிமை பெற்ற தனது கணவரின் பான் கார்டு எண்ணையும், வருமானத்தையும் தெரிவிக்கவில்லை என்றும், அதனால் அவரது வெற்றியை செல்லாது என அறிவிக்க வேண்டும் என்றும் சந்தானகுமார் கோரியிருந்தார்.
இதனை எதிர்த்து கனிமொழி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து கனிமொழி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சென்னை உயர்நீதிமன்ற விசாரணைக்கு இடைக்கால தடை விதித்தது. பின்னர், இது தொடர்பான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கு கடந்த மாதம் விசாரணைக்கு வந்தபோது, கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், கனிமொழியின் கணவருக்கு பான் எண் இல்லை என்றும், அவரது வருமானம் குறித்த கேள்விக்கே இடமில்லை என்றும் வாதிட்டார்.
இந்த நிலையில், கனிமொழியின் மேல்முறையீட்டு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று(மே.4) தீர்ப்பு வழங்கியது. 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து சந்தானகுமார் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதையும் படிங்க: சொத்துப் பட்டியல் விவகாரம்: அண்ணாமலைக்கு கனிமொழி நோட்டீஸ்!