டெல்லி: அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடர்பான சச்சரவுகள் தொடர்ந்து வரும் நிலையில் கடந்த ஜூன் 23 ஆம் தேதி நடந்த பொதுக்குழுவை தடைசெய்யக்கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் பொதுக்குழு கூட்டத்தில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட 23 தீர்மானங்களைத் தவிர புதிய தீர்மானங்களை நிறைவேற்றக்கூடாது என உத்தரவிட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து ஜூன் 23 அன்று நடந்த பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவின் அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். மேலும் பொதுக்குழுகூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய கே.பி.முனுசாமி, பொதுக்குழுவில் உள்ள 2700 உறுப்பினர்களில் 2600 உறுப்பினர்கள் 23 தீர்மானங்களையும் நிராகரிப்பு செய்துவிட்டு, ஒற்றைத் தலைமை தொடர்பாக முடிவெடுக்க வலியுறுத்தியதாகவும் அதன் அடிப்படையிலேயே தீர்மானங்கள் ரத்து செய்யப்பட்டதாகவும் தெரிவித்தார்.
இதற்கிடையில் அன்றைய பொதுக்குழு கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் மீது காகித வீச்சு, ஈபிஎஸ்ஸிற்கு மாலை அணிவிக்கும்போது எரிச்சலடைந்தது என சச்சரவுகளுக்குப் பஞ்சம் இல்லாமல் அன்றைய பொதுக்குழு நடந்து முடிந்தது. அடுத்த பொதுக்குழுவில் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்படுவார் என்றும் கே.பி.முனுசாமி கூறினார்.
எடப்பாடி பழனிசாமி தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு: அதிமுக பொதுக்குழுவில் தீர்மானங்களை நிறைவேற்ற தடை விதித்த சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை எதிர்த்து பழனிசாமி தாக்கல் செய்த மனுவை வரும் ஜூலை 6ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரிக்க உள்ளது. மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைத்தியநாதன் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வாதாட இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மீறி பொதுக்குழுவில் தமிழ்மகன் உசேனை அவைத் தலைவராக தேர்வு செய்தது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை என உயர் நீதிமன்றத்தில் ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் தொடர்ந்த வழக்கின் விசாரணை இன்று (ஜூலை 4) சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இதையும் படிங்க:ஆட்டத்தைத் தொடங்கிய ஈபிஎஸ்... ஓபிஎஸ்ஸின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?