டெல்லி : 2019ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தின் போது பிரதமர் மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட வழக்கில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில், அவரது எம்.பி பதவி பறிக்கப்பட்டது. தொடர்ந்து தீர்ப்பை எதிர்த்து ராகுல் காந்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து தீர்ப்பு தடை பெற்றார்.
இதையடுத்து அவருக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டது. இந்நிலையில், ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி. பதவி வழங்கப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் பொது நல வழக்கு தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் பூஷன் ஆர் காவாய், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், பொது நல வழக்கின் நோக்கம் அற்பத்தனமாக உள்ளதாகவும், இந்த மனு ஒட்டுமொத்த உச்ச நீதிமன்றத்தின் பொன்னான நேரத்தை வீணடிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். 2019ஆம் ஆண்டு மோடி குறித்து அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்தே ராகுல் காந்திக்கு மீண்டும் எம்.பி பதவி வழங்கப்பட்டு இருப்பதாக நீதிபதிகள் கூறினர்.
முன்னதாக கடந்த ஆண்டு அக்டோபர் மாதம், தகுதி நீக்கம் செய்யப்பட்ட தேசியவாத காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமது பைசலுக்கு, மீண்டும் எம்.பி. பதவி வழங்கியதை கண்டித்து அசோக் பாண்டே என்பவர் பொது நல வழக்கு தொடர்ந்ததாகவும், அதில் வழக்கறிஞர் பாண்டேவுக்கு 1 லட்ச ரூபாய் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்ததாகவும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.
நீதித்துறையில் பொது நல வழக்கிற்கு என இருக்கும் பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் என வழக்கறிஞருக்கு அறிவுரை வழங்கிய நீதிபதிகள் ஒரு லட்ச ரூபாயை அபராதமாக விதித்து வழக்கை தள்ளுபடி செய்தனர்.
இதையும் படிங்க : இந்தியாவுக்கு தனி விண்வெளி மையம் - அடுத்த ஆண்டு பாரதிய விண்வெளி மைய பணி துவக்கம் - இஸ்ரோ தலைவர் சோம்நாத்!