டெல்லி: வீடியோ கான்பரன்சிங் வழக்கு விசாரணையின் போது இவ்வாறு பொருத்தமற்ற சம்பவங்கள் நடைபெறுவது இது முதல்முறையல்ல.
உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எல். நாகேஸ்வரராவ், ஹேமந்த் குப்தா ஆகியோர் அடங்கிய அமர்வு வழக்கு ஒன்றை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரித்துவந்தனர்.
அப்போது மேலாடையின்றி ஒருவர் தோன்றினார். இந்த விவகாரத்தில் நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அப்போது அவர் கூறுகையில், “இது சரியல்ல. கடந்த 7-8 மாதங்களாக வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரணை நடந்துவருகிறது. இதுபோன்ற பொருத்தமற்ற சம்பவங்களும் நடைபெறுகின்றன” என்று எச்சரித்தார்.
முன்னதாக அக்டோபர் 26ஆம் தேதியும் இதேபோன்று ஒரு சம்பவம் நடந்தது. அன்றைய தினம், நீதிபதி டி.ஒய். சந்திரசூட் வழக்கு ஒன்றை வீடியோ கான்பரன்சிங் வாயிலாக விசாரித்துவந்தார்.
அப்போது வழக்குரைஞர் ஒருவர் டீ-சர்ட்டுடன் படுக்கையில் படுத்து கிடந்த காட்சி வீடியோவில் தெரிந்தது. இதைப் பார்த்த அதிருப்தி தெரிவித்த நீதிபதி டி.ஒய். சந்திரசூட், “யாரிடமும் நான் கடினமாக நடந்துகொள்ள நினைக்கமாட்டேன். ஆனால் நீங்கள் திரையில் தோன்றுகிறீர்கள். மிகுந்த எச்சரிக்கை தேவை” என்றார்.
வழக்குரைஞர்கள் இவ்வாறு பொருத்தமற்ற முறையில் தோன்றுவதும், தேவையற்ற படங்களை காண்பிப்பதும் தொடர்ச்சியாக நடந்துவருகிறது.
இந்த விவகாரம் முதன்முதலில் ஏப்ரல் மாதம் வெளிச்சத்துக்கு வந்தது. ராஜஸ்தான் உயர் நீதிமன்றத்தில் வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வழக்கு ஒன்றின் விசாரணை நடந்தபோது, வழக்குரைஞர் ஒருவர் முறையான சீருடையின்றி தோன்றினார். இதைப் பார்த்த நீதிபதி கடுமையாக கடிந்துகொண்டார்.
கோவிட்-19 பெருந்தொற்று பரவல் காரணமாக, வழக்குரைஞர்கள் நீதிமன்றத்துக்குள் நேரடியாக சென்று வாதாட அனுமதி இல்லை. இந்நிலையில், வீடியோ கான்பரன்சிங் வாயிலாக வழக்கு விசாரணை நடைபெற்றுவருகிறது.
இதையும் படிங்க: கரோனா நோயாளிகளை தீண்டத்தகாதவர்கள்போல் நடத்த வழிவகுக்கும் போஸ்டர்கள் - உச்ச நீதிமன்றம் வேதனை