டெல்லி: கடந்த 2018ஆம் ஆண்டு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி லஞ்ச ஒழிப்புத் துறையில், அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மீது புகார் அளித்திருந்தார். அதில், தமிழ்நாட்டில் ரூ.4 ஆயிரத்து 800 ரூபாய் மதிப்பிலான நெடுஞ்சாலை திட்ட பணிகள் தொடர்பான டெண்டர் ஒப்பந்தங்களை எடப்பாடி பழனிசாமி, அவருடைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு முறைகேடாக வழங்கியதாக கூறப்பட்டிருந்தது.
உயர் நீதிமன்றம் தீர்ப்பு: மேலும், இந்த திட்ட பணிகளுக்கான நிதி ஒதுக்கீட்டிலும் முறைகேடு நடைபெற்றிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்டது. இதுதொடர்பாக, எடப்பாடி பழனிசாமி மீது சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆர்.எஸ்.பாரதி வழக்கு தொடர்ந்தார். இதை விசாரித்த உயர் நீதிமன்றம், தேவைப்பட்டால் எடப்பாடி பழனிசாமி மீது வழக்குப்பதிவு செய்து சிபிஐ விசாரணை நடத்தலாம் என 2018ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
இதையடுத்து, உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மேலும், அந்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பிற்கு இடைக்கால தடை விதித்து தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.
இருதரப்பு வாதங்கள்: நீண்ட நாள்களாக நிலுவையில் இருந்த வழக்கை விசாரிக்கக் கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்தது. இந்நிலையில், ஈபிஎஸ் தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்வி ரமணா தலைமையிலான அமர்வின் முன்பு இன்று (ஆக. 3) விசாரணைக்கு வந்தது.
வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், ஆர்யமா சுந்தரம்,"எடப்பாடி பழனிசாமிக்க எதிராக திமுக கொடுத்த புகாரின் பேரில் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார். திமுக சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சிபல், இதில் சுதந்திரமான விசாரணை தேவை என்றார். ங
அதற்கு தலைமை நீதிபதி,"நீங்கள் தனி நீதிபதியின் உத்தரவை முதலில் படியுங்கள். இதற்கு சுதந்திரமான விசாரணை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது குறித்து உயர் நீதிமன்றம் முடிவெடுக்கட்டும்" என்றார்.
இவ்வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள்," இவ்வழக்கில் லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிக்கையை முறையாக ஆய்வு செய்து, இதுதொடர்பாக உயர் நீதிமன்றமே விசாரணையை தொடர வேண்டும்" என்றனர். சிபிஐ விசாரணை குறித்த உத்தரவை ரத்து செய்தும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதையும் படிங்க: அதிமுக பொதுக்குழு வழக்கை உயர் நீதிமன்றம் விசாரிக்கட்டும் - உச்ச நீதிமன்றம்