டெல்லி: நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிமின் மருமகன் முகமது இப்ராஹிம் கஸ்கர், கட்டட நிறுவன உரிமையாளரை மிரட்டிப் பணம் பறித்த புகாரில் கடந்த 2019-ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். மகாராஷ்டிரா குற்றவியல் சட்டம் ஒழுங்கு ஆணையம் கஸ்கர் மீது வழக்குப்பதிவு செய்தது.
இந்தப் புகாரில் சோட்டா ஷகீல், ஃபஹீம் முச்மாச் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில், ஜாமீன் கோரி கஸ்கர் கடந்த 2021-ம் ஆண்டு மும்பை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், ஜாமீன் கோரி உச்ச நீதிமன்றத்தில் கஸ்கர் மேல்முறையீடு செய்தார்.
இந்த மேல்முறையீட்டு மனு இன்று விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், "வழக்கின் விசாரணை இன்னும் முடியவில்லை. வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட அனைவர் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. அதனால் இந்த வழக்கில் இப்போது ஜாமீன் வழங்க முடியாது’’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர். மேலும், 6 மாதங்களுக்குள் அனைத்து குற்றவாளிகள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதிகள், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, மீண்டும் ஜாமீன் மனு தாக்கல் செய்ய கஸ்கருக்கு அனுமதி வழங்கினர்.