டெல்லி : உத்தரப் பிரதேச மாநிலம் லக்கிம்பூர் கேரி மாவட்டத்தில் உள்ள கிராமத்தில், விவசாய சட்டங்களுக்கு எதிராக போராடிய விவசாயிகள் மீது உள்துறை இணையமைச்சர் அஜய் மிஸ்ராவின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா காரை ஏற்றி இருவரை கொன்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அதன்பின்னர் நடந்த வன்முறை சம்பவத்தில் 4 விவசாயிகள் உள்பட 8 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த வழக்கை உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து (சூமோட்டோ) ஆக விசாரித்துவருகிறது. வழக்கை தலைமை நீதிபதி என்.வி. ரமணா, நீதிபதிகள் சூர்யா காந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்துவருகின்றனர்.
இரண்டாம் நாள் விசாரணை நடைபெறும் இன்று (அக்.8) நீதிபதிகள் உத்தரப் பிரதேச அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். உத்தரப் பிரதேச அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் சால்வே, “குற்றஞ்சாட்டப்பட்டவர் அக்.9ஆம் தேதி மதியம் 11 மணிக்குள் ஆஜராக அழைப்பாணை அளிக்கப்பட்டுள்ளது” என்றார்.
![SC begins hearing Lakhimpur Kheri case: CJI says onus on UP govt to take actions](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/1b26c1c7e04b2254534979e547cf51e7_0710a_1633622717_405.jpg)
இந்நிலையில் நீதிபதிகள், “வழக்கின் தீவிரம் அறிந்துதான் பேசுகிறீர்களா? விவசாயிகள் கார் ஏற்றி கொல்லப்பட்டுள்ளதாக குற்றஞ்சாட்டு எழுந்துள்ளது. இது ஒரு கொலைக் குற்றம். இந்த விவகாரத்தில் உத்தரப் பிரதேச அரசு எடுத்த உறுதியான நடவடிக்கை என்ன? இதுவே சாதாரண நபர் என்றால் இவ்வாறுதான் கால அவகாசம் அளிப்பீர்களா? குற்றவாளிகளை கைது செய்யாமல், கெஞ்சுவது ஏன்? என சரமாரி கேள்வியெழுப்பினர்.
மேலும் வழக்கு இவ்வாறு மெத்தனமாக சென்றால் மத்திய புலனாய்வு விசாரணை (சிபிஐ)யும் பலன் அளிக்காது என்று வருந்தினார். இதற்கிடையில் ஒன்றிய இணையமைச்சரின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா நேபாள எல்லையில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ஷாருக்கான் மகன் ஆர்யன் கானுக்கு நீதிமன்ற காவல்!