இந்தியாவின் கோவிட்-19 நிலவரம் தொடர்பாக வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திசூட், ரவிந்திர பட், நாகேஷ்வர ராவ் ஆகியோரின் தலைமையிலான அமர்வு விசாரித்தது. இன்றைய விசாரணையில் மத்திய அரசின் தடுப்பூசி கொள்கை குறித்து அரசு வழக்கறிஞர் துஷார் மேத்தாவிடம் சரமாரி கேள்வி எழுப்பப்பட்டது.
உச்ச நீதிமன்ற அமர்வு எழுப்பிய கேள்விகள்
விசாரணையில், "நாட்டின் பல மாநிலங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு தடுப்பூசிக்காக சர்வதேச டெண்டர்களை அறிவித்துவருகின்றன. இதுதான் மத்திய அரசின் கொள்கையா? நாட்டின் பல்வேறு பிராந்தியங்களின் தேவைக்கு ஏற்றவாறு தடுப்பூசி விநியோகத்தை மத்திய அரசு உறுதிசெய்யாதது ஏன்.
45 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசி விநியோகத்தை மேற்கொள்ளும் மத்திய அரசு, 18 வயதுக்கு மேற்பட்டோருக்கான தடுப்பூசிகளை மாநிலங்களின் கைகளுக்கு விட்டுவிட்டது ஏன் ? 18-45 வயதில் இணை நோய் உள்ளவர்களின் நிலை என்ன ஆவது.
தடுப்பூசி தேவையானவர்கள் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும் என்றால், ஜார்கண்ட் மாநிலத்தின் கிராமத்தில் வசிக்கும் ஏழைக்கு இது சாத்தியமாவது எப்படி? வேறு மாநிலங்களில் வேலை செய்யும் புலம்பெயர் தொழிலாளர்கள் எவ்வாறு தடுப்பூசி பெறுவார்கள்" எனப் பல கேள்விகளை உச்ச நீதிமன்ற அமர்வு முன்வைத்தது.
இதையடுத்து வழக்கு விசாரணையை இரு வாரங்களுக்கு ஒத்திவைத்த அமர்வு, அடுத்த விசாரணையில் பதில்கள் அடங்கிய பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க: 'தடுப்பூசி போட்டுக்கிட்ட சர்டிஃபிகேட் காட்டுனாதான் மதுபானம்..' - உ.பி.யில் அசத்தல் ட்ரிக்