காவல் சித்ரவதை, மனிதாபிமானமற்ற விசாரணை முறைகளைத் தடுக்க சட்டம் இயற்றக்கோரி முன்னாள் மத்திய சட்டத்துறை அமைச்சரும், மூத்த வழக்கறிஞருமான அஸ்வினி குமார் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவானது, உச்ச நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வின் முன்பாக இன்று (டிச.4) மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால்,“ 1997ஆம் ஆண்டில் நடைபெற்ற (டி.கே.பாசு Vs மேற்கு வங்க அரசு) வழக்கில் சித்ரவதைகள், மனிதாபிமானமற்ற விசாரணை முறைகளைத் தடுக்க 11 கட்டளைகள் கொண்ட வழிகாட்டுதலை உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது.
கைது செய்யப்படுபவர்களை நாடு முழுவதும் உள்ள காவலர்கள் எப்படி நடத்த வேண்டும் என்பது குறித்து 11 கட்டளைகள் கொண்ட வழிகாட்டுதலை வழங்கியுள்ளது. அந்த வழக்கு இன்னும் விசாரிக்கப்படுகிறது. அந்த வழக்கோடு இந்த வழக்கையும் இணைக்க வேண்டும்” என கோரினார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் வாதிட்ட அஸ்வினி குமார், “குற்றஞ்சாட்டப்பவர் கைது செய்யப்படுவதற்கு முன்னர் அவரது உறவினர்களுக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும், கை விலங்கு போடக்கூடாது என 11 கட்டளைகளை நாடு முழுவதும் உள்ள காவல் நிலையங்கள் கடைப்பிடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. அந்தத் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ள 11 கட்டளைகள் நாட்டில் எங்குமே கடைப்பிடிக்கப்படவில்லை. அதற்கான நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் விசாரணையும் நடந்துவருகிறது” என்றார்.
இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த நீதிமன்றம், “இந்த வழக்கின் விசாரணையை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ. பாப்டே தலைமையிலான அதற்குரிய அமர்வின் முன்பாக வரும் ஜனவரி 9ஆம் தேதியன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்” என கூறி ஒத்திவைத்தது.
![SC adjourns hearing over framing law on custodial torture, inhuman treatment](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/10113066_dl.jpg)
ஐநாவின், சித்ரவதைக்கெதிரான உடன்பாட்டில் (Convention Against Torture—CAT) 1997இல் இந்தியா கையெழுத்திட்டது. ஆனால், ஏற்புறுதி செய்யவில்லை. ஏற்புறுதி செய்தால் மட்டுமே இந்தியாவில் சித்திரவதையைத் தடுப்பதற்கான சட்டத்தை இயற்றி அமல்படுத்த முடியும். இருப்பினும் 2010ஆம் ஆண்டில், சித்ரவதை தடுப்புச் சட்ட முன்வரைவு நாடாளுமன்றத்தில் அமல்படுத்தப்பட்டு அது தேர்வுக்குழுவின் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டது. அதற்குப் பின்னர் 11 ஆண்டுகளாகியும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் இருப்பது கவனிக்கத்தக்கது.
இதையும் படிங்க : ராபர்ட் வதேரா அலுவலகத்தில் வருமான வரித் துறை சோதனை!