மலப்புரம்: கேரள வனத்துறையினர், குடியிருப்புப்பகுதிகளில் இருந்து பாம்புகளை மீட்க உதவும் 'சர்ப்பா' என்னும் செயலியை அறிமுகப்படுத்தியுள்ளனர். ஒருவர் தங்கள் பகுதியில் பாம்பைக் கண்டால், பாம்பை போட்டோ எடுத்து அதைச்செயலியில் பதிவேற்றினால் போதும். அருகில் உள்ள பாம்பு மீட்புக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பாம்பை மீட்டுவிடுவர்.
பயம் காரணமாக மக்களால், பாம்புகள் கொல்லப்படுவதற்கான வாய்ப்பைக்குறைப்பதற்கும், பல்வேறு விஷப் பாம்புகள், அவற்றின் நடவடிக்கை, பாம்பு கடித்தால் முதலுதவி சிகிச்சை போன்றவற்றைப்புரிந்துகொள்வதற்கும் உதவுவதை நோக்கமாகக்கொண்டு இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.
மாநிலம் முழுவதும் வனத்துறையினரால் பாம்பு மீட்பவர்களின் பரந்த நெட்வொர்க் உருவாக்கப்பட்டு, அவர்களுக்கு வனத்துறை மூலம் பயிற்சி அளிக்கப்பட்டது. எனவே, ஒரு புகைப்படம் பதிவேற்றப்படும்போது, அந்த சர்ப்பா செயலி, ஜிபிஎஸ் இருப்பிடத்தைக்கண்டறிந்து, அருகிலுள்ள பாம்பு மீட்பவருக்கு செய்தி அனுப்பிவிடும்.
இந்தச் செயலியில் பாம்பு மீட்பவர்களின் மொபைல் எண்களின் பட்டியலும் வழங்கப்பட்டுள்ளன. ஒருவர் குடியிருப்பில் புகுந்த பாம்பை போட்டோ எடுக்க முடியாவிட்டாலும், அப்பகுதியில் உள்ள பாம்பு மீட்பவருக்கு மொபைல் எண்ணைத்தொடர்புகொண்டு கூறலாம். இந்த 'சர்ப்பா' செயலியை பிளே ஸ்டோர் அல்லது ஆப் ஸ்டோரிலிருந்து இலவசமாகப் பதிவிறக்கம் செய்யலாம்.
இதையும் படிங்க: கிரிக்கெட் வாரிய தலைவரான திமுக அமைச்சர் மகன்.. அமித்ஷாவின் மகன் காட்டிய அனுசரணை..