ஹைதராபாத்: குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற மலாலா யூசுப்சாய் ஆகிய இரு பெண்களின் வாழ்க்கை ஒரு சாதாரண பெண்ணின் விடாமுயற்சிக்கும், அனைத்து துறைகளிலும் பெண்களின் சம பங்களிப்பை உறுதிசெய்ததற்கும் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. இருவரும் அடைந்திருக்கும் உயரம் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடாது. பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா பகுதியை சேர்ந்த பஷ்டூன் பழங்குடியினத்தை சேர்ந்தவர் மலாலா.
இஸ்லாமிய சட்டத்தின்படி பழங்குடியினப் பெண்கள் பள்ளிக்குச் செல்வதற்கு தடை விதிக்கப்பட்ட நேரத்தில் துணிச்சலாக பள்ளிப்படிப்பை தொடர்ந்தவர். குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்விக்காகவும் அவர்களது முன்னேற்றத்திற்காகவும் குரல் கொடுத்து, தனது இனத்தை சேர்ந்த மற்ற சிறுமிகளையும் பள்ளிப்படிப்பை தொடரும்படி செய்தார். இவ்வளவு தைரியமும் அவருக்கு 14 வயதிலேயே வந்ததுதான் அவருக்கு முதல் வெற்றியாக இருந்தது.
இதன் காரணமாக 2012ஆம் ஆண்டு தாலிபான்கள் மலாலாவை துப்பாக்கியால் தாக்கினர். அப்போது அவருக்கு 15 வயதுதான். கழுத்தில் பாய்ந்த குண்டுடன் மலாலா மருத்துவமனையில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு உயிர் பிழைத்தார். 17 வயதில் பிரிட்டனுக்கு குடியேறினார். இருப்பினும், பெண் குழந்தைகளின் கல்விக்காகவும், உரிமைக்காகவும் போராடுவதை நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து குரல் எழுப்பிவருகிறார். இதற்காக அவருக்கு 2014ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இவரைப்போலவே இவரது பஷ்டூன் இன மக்களும் போராட்டங்களுக்கும், தைரியத்திற்கும் பெயர் பெற்றவர்கள். சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள். குறிப்பாக 80-களில் ரஷ்யாவிற்கு எதிரான போராட்டங்களில் முக்கிய பங்கு வகித்தனர்.
மறுபுறம், திரௌபதி முர்மு இந்தியாவின் முதல் பழங்குடியினப் பெண் குடியரசுத்தலைவர் என்ற மாபெரும் உயரத்தை எட்டியிருக்கிறார். மேற்கு வங்கம், ஒடிசா, அசாம், ஜார்கண்ட் மாநிலங்களை பூர்வீகமாக கொண்ட சந்தால் எனும் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் முர்மு. ஒடிசாவில் பிறந்தார். பட்டப்படிப்பை முடித்த பிறகு ஆசிரியராக பணியாற்றினார். இதையடுத்து ஒரு கவுன்சிலராக தனது அரசியல் வாழ்க்கையை தொடங்கினார். அதன் பின் சட்டப்பேரவை உறுப்பினர். பாஜகவை சேர்ந்த அமைச்சர் என்று பதவிகள் உயர்ந்தன. இறுதியாக ஜார்கண்ட் மாநில ஆளுநராக முர்மு பதிவிவகித்தார். இப்போது குடியரசு தலைவராக பதிவியேற்றுள்ளார்.
இந்தியாவில் உள்ள பழங்குடியினங்களில் 8 விழுக்காடு மக்கள் தொகையை கொண்ட இவரது சந்தால் இனம் வரலாற்றில் மிக முக்கிய பங்கினை வகித்துள்ளனர். ஆங்கிலேயருக்கு எதிரான முதல் பழங்குடி ஆயுதக் கிளர்ச்சிக்கு தலைமை தாங்கிய தில்கா மஞ்சி என்பவர் சந்தால் இனத்தை சேர்ந்தவர். அதேபோல கேரளாவில் ஆங்கிலேயர் கோட்டையை போரிட்டு கைப்பற்றிய தலக்கல் சந்துவும் சந்தால் இனத்தை சேர்ந்தவர்தான். அந்த வகையில், வீரமும், சுதந்திர வேட்கையும் கொண்ட இனத்திற்கு இப்போது பிரதிநிதித்துவம் கிடைத்துள்ளது.
விளையாட்டு, கலை, கவிதை, இலக்கியம், அரசியல் மூலம் தங்கள் சமூகத்தை மேம்படுத்தும் சாந்தல் பழங்குடியினம் படிப்படியாக பல துறைகளில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுவருகிறது. அதோபோல பிற பழங்குடியினத்தைச் சேர்ந்த சாதனையாளர்களில் ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், ஈட்டி எறிதல் வீராங்கனை பூர்ணிமா ஹெம்ப்ராம், திரைப்படத் தயாரிப்பாளர் திவ்யா ஹன்ஸ்தா, எவரெஸ்ட் சிகரத்தை அடைந்த பினிதா சோரன் ஆகியோரும் தங்களது விடாமுயற்சியால் தங்களது இனத்தை பிரதிநிதிதுவப்படுத்தியுள்ளனர்.
இந்த வரிசையில் மிகப்பெரும் இடத்தை எட்டிய முர்மு தேசத்தின் அரசியலமைப்பை வழிநடத்த உள்ளார். உலகின் இரண்டாவது மிகப் பெரிய ராணுவத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க போகிறார். இவர் மூலம் பல தசாப்தங்களாக கிடப்பிலிருக்கும் பழங்குடியின மக்களின் கோரிக்கைகளும், கனவுகளும் நிறைவேறும் நம்பிக்கை பிறந்துள்ளது.
இதையும் படிங்க: மாநிலங்களவையில் மேலும் 3 எம்பிக்கள் சஸ்பெண்ட்... இதுவரை எத்தனை பேர் தெரியுமா..?