மும்பை: மகாராஷ்டிரா மாநில போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் முன்னாள் மண்டல இயக்குநர் சமீர் வான்கடேவுக்கு வழங்கப்பட்ட இடைக்கால பாதுகாப்பை ஜூன் 8ஆம் தேதி வரை நீட்டித்து மும்பை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
மும்பையில் இருந்து கோவா சென்ற கோர்டேலியா குரூஸ் சொகுசு கப்பலில் போதைப் பொருள் புழக்கம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து மும்பை போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் உள்ளிட்டவர்களை 2021ம் ஆண்டு அக்டோபர் 3ஆம்தேதி போதை பொருள் வழக்கில் கைது செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
சிறையில் அடைக்கப்பட்ட ஆர்யன் கான் 3 வாரங்களுக்கு பிறகு போதைப் பொருள் வைத்து இருந்ததற்கான ஆதாரங்கள் இல்லை என ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனிடையே ஆர்யன் கானை வழக்கில் இருந்து விடுவிக்க ஷாருக்கானிடம் 25 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக சமீர் வான்கடே மீது குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் அவர் மீது மத்திய புலனாய்வுத் துறை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்தது.
இந்த நிலையில் சமீர் வான்கடே மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் தனக்கு எதிரான சிபிஐ வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனவும் கைது உள்ளிட்ட நடவடிக்கை எடுக்க சிபிஐக்கு தடை விதிக்க வேண்டும் எனவும் கூறியிருந்தார். ஆர்யன் கானை கைது செய்ததற்காக பழிவாங்கும் நடவடிக்கையாக தன் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து உள்ளதாகவும் மனுவில் சமீர் வான்கடே குறிப்பிட்டு இருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஷர்மிளா தேஷ்முக் தலைமையிலான பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது வாதிட்ட சிபிஐ சிறப்பு வக்கீல் ஊழல் தடுப்பு சட்டத்தின் படியே சமீர் வான்கடே மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய அனுமதி பெற்று அதன்படியே பதிவு செய்யப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.
சமீர் வான்கடேவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஸ்வான் மெர்ச்சண்ட், வான்கடே மீது தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டு 4 மாதங்கள் ஆவதாகவும் கூறினார். இந்நேரம் துறை ரீதியான விசாரணை முடிந்திருக்க வேண்டும். ஆனால் முடியவில்லை இந்த நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டதால் தான் தங்கள் தரப்பு நீதிமன்றத்தை நாடியதாக வாதிட்டார்.
இருதரப்பு விவாதங்களையும் கேட்ட நீதிபதி சமீர் வான்கடேவை எந்த சூழ்நிலையிலும் வரும் மே 22ஆம் தேதி வரை காவலில் வைக்கக் கூடாது என்றும் அதேநேரம் சமீர் வான்கடே விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் தீர்ப்பு வழங்கினர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மே. 22ஆம் தேதிக்கு ஒத்திவைத்து இருந்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கு, நேற்று (மே. 22) மீண்டும் நீதிபதிகள் அபய் அஹுஜா மற்றும் எம்.எம் சதாயே ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மேலும் இடைக்கால நிவாரணத்தை நீட்டிக்க வேண்டும் என சமீர் வான்கடே தரப்பு தெரிவித்ததை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ஜூன் 8ஆம் தேதி வரை சமீர் வான்கடேவை கைது செய்ய இடைக்கால தடை உத்தரவை நீட்டித்து உத்தரவிட்டனர்.
இதனிடையே தனக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாகவும், சிறப்பு பாதுகாப்பு வழங்கக் கோரியும் மும்பை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீர் வான்கடே மனு கொடுத்து உள்ளனர். உத்தரபிரதேசத்தில் பிரபல ரவுடி மற்றும் அரசியல்வாதியான அடிக் அகமதும் அவரது சகோதரரும் போலீசார் கண்முன்னே பொது வெளியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தை மேற்கொள்காட்டி சமீர் வான்கடே பாதுகாப்பு கோரியதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.