சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் நடைபெற்ற இயற்கை விவசாயம் தொடர்பான கருத்தரங்கில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "நாடு 75வது சுதந்திர தினத்தை கொண்டாடி வரும் வேளையில், நாட்டில் மிகப்பெரிய மாற்றங்களுக்கு அடித்தளமாக அமையும் பல்வேறு திட்டங்களை செயல்படுத்த தொடங்கியுள்ளோம். நாட்டின் வளர்ச்சியை விரைவுபடுத்த அனைவரின் பங்களிப்புதான் அடிப்படை, அந்த பங்களிப்புதான் மேம்பாட்டை நோக்கி வழிநடத்தும்.
இந்தியா புவியியல் ரீதியாகவும், கலாச்சார ரீதியாகவும் விவசாயம் சார்ந்த நாடாக உள்ளது. தற்போது சூரத்தில் உருவாகி வரும் இயற்கை விவசாய மாடல், ஒட்டுமொத்த இந்தியாவுக்கே முன்மாதிரியாக அமையும். கடந்த சில மாதங்களுக்கு முன்பு குஜராத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான இயற்கை விவசாய கருத்தரங்கில் நாடு முழுவதிலும் இருந்து ஏராளமான விவசாயிகள் கலந்து கொண்டனர்.
அதேபோல் இன்று மீண்டும் நடக்கும் இந்த நிகழ்ச்சி, நாட்டின் உணவுத் தேவைக்கு சூரத் எந்த அளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை காட்டுகிறது. இந்தியா விவசாயத்தை அடிப்படையாக கொண்ட நாடு என்பதால், விவசாயிகளும், விவசாயமும் முன்னேறும்போது, அதன் மூலம் நாடு முன்னேறும்.
டிஜிட்டல் இந்தியா உள்ளிட்ட திட்டங்கள், கிராமங்களால் மாற்றங்களை கொண்டுவர மட்டுமல்ல, மாற்றங்களை நோக்கி வழிநடத்தவும் முடியும் என நிரூபித்துள்ளது. பரம்பரகத் க்ரிஷி விகாஸ் யோஜனா உள்ளிட்ட திட்டங்கள் மூலம் விவசாயிகளுக்கு ஆதரவு அளிக்கப்படுகிறது, இத்திட்டத்தால் லட்சக்கணக்கான விவசாயிகள் பயனடைந்து வருகின்றனர்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க:16 ஆண்டுகளுக்குப் பிறகு பெற்றோரை தேடும் கேரள இளைஞர்!