பத்தினம்திட்டா: ஓணம் பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று(செப்.6) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. மேல்சாந்தி பரமேஸ்வரன் நம்பூதிரி நடையை திறந்து வைப்பார். நாளை(செப்.7) முதல் 10ஆம் தேதி வரை திருவோண பூஜைகள் நடைபெறும்.
உத்ராட நாள் முதல் சதயம் வரை பக்தர்களுக்கு ஓணம் விருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோவில் நடை திறந்திருக்கும் இந்த 4 நாட்களும் உதயாஸ்தமய பூஜை, அஷ்டாபிஷேகம், கலசாபிஷேகம், படிபூஜை மற்றும் புஷ்பாபிஷேகம் நடைபெறும்.
10ஆம் தேதி இரவு 10 மணிக்கு ஹரிவராசனம் பாடி நடை மூடப்படும். பக்தர்கள் தரிசனத்துக்கான ஆன்லைன் முன்பதிவு நடைபெற்று வருகிறது. நிலக்கல்லில் ஸ்பாட் புக்கிங் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மோசமான வானிலை காரணமாக பம்பை நதியில் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.